1988இல் நடக்கும் கதையில் படத்தின் நாயகர்கள் நட்ராஜ் மற்றும் ராஜாஜி இருவரும் நண்பர்கள். கட்அவுட்டுக்கு ஓவியம் வரையும் தொழில் செய்து வருகிறார்கள். பின்னர் தனது சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டத்திற்கு வரும் நட்ராஜ், ராஜாஜியையும் தன்னுடன் அழைத்து வருகிறார். பின்னர் தனது அம்மா மற்றும் தங்கை சஞ்சிதா ஷெட்டியையும் திருநெல்வேலி அழைத்து வருகிறார். பின்னர் நட்ராஜ் மற்றும் ராஜாஜி அங்கேயே சொந்தமாக தொழில் செய்ய முடிவு செய்கின்றனர். இதில் நட்ராஜ் தீவிர ரஜினி ரசிகராக ரஜினி படங்களை கட்அவுட்களில் வரைந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். ராஜாஜி கமல் ரசிகராக கமல் படங்களை வரைய விரும்புகிறார். ஒரு கட்டத்தில் இருவரும் மாவட்ட ரசிகர் மன்றங்களில் உறுப்பினர்களாக இணைகின்றனர். நட்ராஜ், சஞ்சிதாவை காதல் செய்கிறார். கமல் ரசிகரான ராஜாஜிக்கு, பார்வதி நம்பியாரை பார்த்த உடனே காதல் வருகிறது. இவர்களது காதல் ராஜாஜிக்கு தெரியவர நட்ராஜை விட்டு பிரிந்து தனியாக தொழில் செய்ய ஆரம்பிக்கிறார்.
ரஜினி, கமல் படங்கள் ஒரே சமயத்தில் ரிலீசாகிறது. இதில் கட்அவுட் வைப்பத்தில் ஏற்படும் பிரச்சனையில் திரையரங்கு தாக்கப்படுகிறது. இதனால் கடுப்பாகும் தியேட்டர் உரிமையாளரும், அரசியல்வாதியுமான ராதாரவி கட்அவுட் வைத்தால் படங்களை ரிலீஸ் செய்ய முடியாது என்கிறார். அரசியல் பிரச்சனையாக மாறும் இந்த பிரச்சனையை சரி செய்து, படத்தை ரிலீஸ் செய்ய ரஜினி-கமல் ரசிகர்கள் முடிவு செய்து, அதற்காக போராடி வருகின்றனர். இதில் நட்டி, ராஜாஜியை கொல்ல ஆட்களை ஏவிவிடுகிறார் ராதாரவி. இந்த பிரச்சனைகளில் இருந்து நட்டி, ராஜாஜி எப்படி தப்பித்தார்கள், ரஜினி-கமல் படங்களை எப்படி திரையிட்டார்கள், ராதாரவி சூழ்ச்சியில் இருந்து தப்பித்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நட்ராஜ், ரஜினி ரசிகராகவே வாழ்ந்திருக்கிறார். அவரின் ஒவ்வொரு வசனங்களும், ரஜினியை பின்பற்றும் உடல்அசைவுகளும் பார்ப்பதற்கு ரசிக்கும்படி உள்ளது. சிகரெட்டை தூக்கி போடுவது, நடை, உடை என ரஜினி ஸ்டைலில் அசத்துகிறார். இப்படத்தில் ராஜாஜியின் நடிப்பும், அவரது செயல்களும் பார்க்கும்படி உள்ளது. கமல் ரசிகராக மிரட்டியிருக்கிறார். காதல் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். ராதாரவி மிடுக்கான தோற்றத்தில் நடித்துள்ளார். பயந்த சுபாவமாக வரும் இவர் தனது அடியாளின் மூலம் தான் நினைப்பதை செய்து முடிக்கிறார். அரசியல்வாதிக்கு ஏற்ற சாதுர்யங்களும், சூழ்நிலைக்கு தகுந்தபடி நடந்து கொள்வதிலும் தனது நடிப்பின் முதிர்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.
விஜய் முருகன் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சஞ்சிதா தனக்குரிய பாணியில் சிறப்பாக நடித்துள்ளார். காதல் காட்சிகளில் உருகி தனது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தாவணியில் வரும் பார்வதி நாயர் அவருக்கே உண்டான ஸ்டைலில் காதல் காட்சிகளில் ரசிக்கும்படி நடித்திருக்கிறார்.