சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜிஹாதி குழுவினர் நாட்டின் பல பகுதிகளை கையகப்படுத்தி, தங்களின் ஆதிக்கத்தின்கீழ் வைத்து நிர்வகித்து வருகின்றனர். இதுமட்டுமல்லாது, ஐ.எஸ். தீவிரவாதிகளும் சில பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இந்த குழுக்களையும் வேட்டையாட அமெரிக்க விமானப் படையின் துணையுடன் அந்நாட்டு முப்படைகளும் தீவிரமாக போரிட்டு வருகின்றன.
இந்நிலையில், சிரியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள சிறைச்சாலை மீது நேற்றிரவு அந்நாடு விமானப் படைகள் நடத்திய குண்டு வீச்சில் சிறை அதிகாரிகள் இருவர் உள்பட மொத்தம் 16 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குண்டு வீச்சுக்கு பிறகு சிறையில் இருந்து தப்பியோட முயன்ற சிலரை சிறைக் காவலர்கள் சுட்டுக் கொன்றதால் இந்த உயிர் பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளதாகவும் அந்த செய்திகள் குறிப்பிட்டுகின்றன. குண்டு வீச்சு மற்றும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.