கட்டப்பாவ காணோம் – சினிமா விமர்சனம்

நாயகன் சிபிராஜ் ராசியில்லாத பையன் என்ற அடைமொழியோடு சிறுவயதில் இருந்தே வளர்ந்து வருகிறார். தனது தொழில் நஷ்டத்துக்கு சிபிதான் காரணம் என்று அவரது தந்தையும் வெறுக்கிறார். இந்நிலையில், சிபிராஜ் ஒருநாள் நாயகி ஐஸ்வர்யாவை கிளப்பில் பார்க்கிறார். இருவரும் ஒருவருக்கொருவர் பேசி நெருக்கமாகிறார்கள். ஒருகட்டத்தில் இருவரும் காதலர்களாகிறார்கள்.  இருவருக்கும் ராசி பொருத்தம் இல்லை என்று எதிர்ப்பு வருகிறது. அதை மீறி திருமணம் செய்து தனிக்குடித்தனம் செல்கிறார்கள்.

இந்நிலையில், உள்ளூர் தாதாவான மைம் கோபி ஜோசியத்தின் மீது நம்பிக்கையுடையவராக கட்டப்பா என்று வாஸ்து மீனை வளர்த்து வருகிறார். அதனால்தான் தனக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் இருக்கிறது என்ற நம்பிக்கையுடன் இருந்து வருகிறார். அந்த வாஸ்து மீன் திருட்டு போகிறது. பிறகு பல கைகள் மாறி அந்த மீன் சிபிராஜிடம் வருகிறது. வாஸ்து மீனிடம் கோடீஸ்வரர் ஆக ஐஸ்வர்யா ராஜேஷ் பிரார்த்திக்கிறார். சிறு வயதில் இருந்தே ராசியில்லாத பையன் என்று வளர்ந்த சிபிராஜ் கையில் கிடைத்த வாஸ்து மீன் அவருக்கு ராசியை கொடுத்ததா? வாஸ்து மீன் தனது கைக்கு வந்தபிறகு சிபிராஜின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை. 

 சிபிராஜ் நகைச்சுவை நாயகனாக மாறி, கதாபாத்திரத்தில் நச்சென்று பொருந்தி இருக்கிறார். அதிர்ஷ்டமில்லாதவன் என்று ஒதுக்கப்படும் வேதனை, ஏமாற்றங்களை நேர்த்தியாக வெளிப்படுத்துகிறார். வீட்டுக்குள் புகுந்த ரவுடிகளுக்கும் அவருக்கும் நடக்கும் மோதல்கள் சுவாரஸ்யம். ஐஸ்வர்யா ராஜேஷ் அழகும் கவர்ச்சியுமாய் வருகிறார். சிபிக்கும் இவருக்குமான மோதலும் காதலும் ரசிக்க வைக்கிறது.