தற்கால சூழலுக்கு ஏற்ப சமூக வலைத்தள மோகத்தினால் போலி நட்புகளை நம்பி வாழ்வைத் தொலைக்கும் நிலை, திரில்லர், நகைச்சுவை, சென்டிமென்ட் என அனைத்தும் கலந்து வந்திருக்கிறது ‘வாங்க வாங்க’. அப்புக்குட்டி, நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனிடம் கதை சொல்கிறார், அந்த கதையே ‘வாங்க வாங்க’. நிவேதிதா, மதுசந்தா ஆகிய இருவரும் பேஸ்புக் மூலம், தொடர்பில் இருக்கும் குறிப்பிட்ட சில ஆண் நண்பர்களை வலையில் வீழ்த்தி தங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வது வாடிக்கை. இவர்கள் தங்கியிருக்கும் வீட்டிற்குள் பேய் இருக்கிறது. இந்த பேயிடம் முதலில் சிக்குவது கராத்தே ராஜா தான். சட்டவிரோத பணப் பரிமாற்ற தொழில் செய்யும் கராத்தே ராஜா, மிகப்பெரிய தொகையுடன் வரும்போது, தனது பேஸ்புக் தோழி மதுசந்தாவை பார்க்க வருகிறார்.
ஆனால் வந்த இடத்தில் பேய் தாக்கி காணாமல் போகிறார். பணத்தை கொடுத்து அனுப்பிய நபரோ, கராத்தே ராஜாவை தேடுவதற்கு விக்கி, ஹனிபா ஆகியோரை அனுப்புகிறார். இதேபோல் பேஸ்புக் தொடர்பு பழக்கத்தில் நிவேதிதாவின் நண்பர் ஒருவர் வீட்டிற்கு வரும்போது அவரை பேய் அடித்துக் கொல்கிறது. ஒரு கட்டத்தில் அந்த வீட்டில் பேய் இல்லை என்பதும், பெண்கள் இருவரும் திட்டமிட்டே கொலை செய்ததும் தெரிகிறது. குறிப்பிட்ட வாலிபர்களை மட்டும் வீட்டிற்கு வரவழைத்து இவர்கள் கொலை செய்வது ஏன்? அவர்களுக்கிடையே உள்ள பிரச்சினை என்ன? என்பதே மீதி கதை.
விக்கியும், ஹனிபாவும் சட்டவிரோதமாக பணப் பரிமற்றம் செய்யும் நபர்களாக, கம்பீரமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். பேஸ்புக்கில் நண்பர்களை வசியம் செய்யும் கதாபாத்திரங்களான நிவேதிதா, மதுசந்தா இருவரும் குறை சொல்ல முடியாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் என ஒட்டுமொத்த வேலையையும் செய்துள்ள என்.பி.இஸ்மாயில், சமூக கருத்தினை, ‘வாங்க வாங்க’ என்று அழைத்து சொன்னதற்கு முதலில் பாராட்டு தெரிவிக்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் போலி நட்பினால் ஏற்படும் பின்விளைவுகள், மோசடி பெண்களை நம்பி வாழ்க்கையை தொலைக்கும் இளைஞர்கள் என சமூகம் சார்ந்த பிரச்சனைகளை சுட்டிக்காட்டி இருப்பது சிறப்பு. சி.பி.சிவன், பகவதி பாலாவின் ஒளிப்பதிவும் ராஜேஷ் மோகனின் இசையும் படத்திற்கு கூடுதல் சிறப்பு.