காலிப் பணியிடங்களை நிரப்புக சத்துணவு ஊழியர்கள் 2வது நாளாக சாலை மறியல்

காலிப்பணியிடங்களை நிரப்புக உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் மாநிலத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் செவ்வாய்கிழமை (மார்ச் 21) முதல் வியாழக்கிழமை வரை 3 நாட்கள் தொடர் சாலை மறியல் போராட்டம் நடைபெறுகிறது. அதன் ஒருபகுதியாக சென்னை மாவட்டக்குழு சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இன்று
(மார்ச் 22) 2வது நாள் மறியல் போரட்டம் மாவட்டத் தலைவர் ஆர்.கேசவன் தலைமையில் நடைபெற்றது. 
 
இதுகுறித்து மாநிலப் பொருளாளர் எஸ்.சுந்தராம்மாள் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 
 
சத்துணவு ஊழியர்களை முழு நேர ஊழியராக்கி அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணிக்கொடை 3 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். தற்போது வழங்கப்படும் 1,500 ரூபாய் ஓய்வூதியம் போதுமானதல்ல. குறைந்தபட்சம் 3,500 வழங்க வேண்டும். 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ளன. அவற்றை உடனடியாக நிரப்ப வேண்டும். கடந்த 32 ஆண்டுகளாக பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகிறோம். ஆனால் இதுவரை ஆண்ட எந்த அரசும் எங்களை கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து சத்துணவு ஊழியர் ஏமாற்றப்படுகிறார்கள்.
எனவே அரசு சங்க பிரதிநிதிகளை அழைத்து உடனடியாக பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் ஏப்ரல் 25 முதல் தொடர் வேலை நிறுத்தப் போரட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார். இதில் மாவட்ட செயலாளர் டி.தேவிகா, அரசு ஊழியர் சங்க நிர்வாகி டேனியல், பொருளாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்கள். மறியலில் ஈடுபட முயன்ற நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.