அயர்லாந்து நாட்டின் முன்னாள் துணை பிரதமர் மார்ட்டின் மெக்கின்னஸ் மரணம்

வடக்கு அயர்லாந்தில் உள்ள லண்டன்டெர்ரி பகுதியில் 23-5-1950 அன்று பிறந்த மார்ட்டின் மெக்கின்னஸ், பிரிட்டன் நாட்டின் காலனி ஆதிக்கத்தில் இருந்து தனது தாய்நாட்டை விடுவிப்பதற்காக தலைமறைவு புரட்சியாளராக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்து வழிநடத்தினார்.  அயர்லாந்து விடுதலைப் படையின் தளபதியாக தன்னை பிரகடனப்படுத்தி கொண்ட இவரது கோரிக்கைக்கு உள்நாட்டில் வாழும் பிராட்டஸ்ட்டன்ட் பிரிவு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இவரது ஆயுதப் புரட்சியால் பொதுமக்கள் உள்பட சுமார் 2 ஆயிரம் பேர் உயிரிழந்ததையடுத்து பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் இவரை தீவிரவாதியாக அப்போது அறிவித்திருந்தன.

பின்னாளில், பிரிட்டன் தரப்பினருடன் சமரசம் செய்துகொண்டு சின் பெயின் என்ற பெயரால் அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்த அமார்ட்டின் மெக்கின்னஸ், கடந்த 1980ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தனது கட்சி வேட்பாளர்களை நிறுத்தி, வெற்றிபெற்று அங்கு ஆட்சி அமைத்தார். வடக்கு அயர்லாந்தின் ஆட்சி அதிகாரம் அனைத்தும் பிரிட்டன் அரசிடம் இருந்த நிலையில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அயர்லாந்தின் முதல் துணை பிரதமர் (தலைமை மந்திரி) என்ற பெருமைக்குரியவராக விளங்கினார். கடந்த 2007ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை இந்த பதவியில் நீடித்த மார்ட்டின் மெக்கின்னஸ் புற்றுநோய் சார்ந்த விஷக்கிருமி தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.  சிகிச்சை பலனின்றி அவர் இன்று மரணம் அடைந்ததாக வடக்கு அயர்லாந்தின் சின் பெயின் கட்சி தலைமையகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.