விஜயவாடாவை சேர்ந்த ஏர் கோஸ்டா நிறுவனம் கடந்த பிப்ரவரி மாத இறுதிவரை செயல்படவில்லை. மே மாதம் வரை முன்பதிவு செய்யப்போவதில்லை என ஏற்கன்வே அறிவித்திருக்கிறது. இந்த நிலையில் ஜனவரி மாத சம்பளத்தை வழங்காததால் 40 விமானிகள் உள்ளிட்ட பல பணியாளர்கள் ராஜினாமா செய்திருக்கின்றனர். 2012ஆம் ஆண்டு கிங்பிஷர் நிறுவனத்துக்கு ஏற்பட்ட நிலைமை இந்த நிறுவனத்துக்கும் ஏற்படலாம் என தற்போது ஏர் கோஸ்டாவில் பணியாற்றும் மூத்த பணியாளர்கள் ஒருவர் தெரிவித்தார். சில பணியாளர்களுக்கு ஜனவரி மாத சம்பளம் வழங்கப்படவில்லை.
தவிர பிப்ரவரி மாத சம்பளம் யாருக்கும் வழங்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நிதி நெருக்கடி ஏற்பட்டது. விமானத்துக்கான வாடகையை செலுத்தாததால், ஒரு விமானத்தை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டது. அப்போது 600 பணியாளர்கள் இருந்ததாகவும் அதன் பிறகு 150 பணியாளர்கள் வெளியேறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனவரி மற்றும் பிப்ரவரி மாத சம்பளங்களை மார்ச் 15ஆம் தேதிக்குள் கொடுப்பதாக நிறுவனம் வாக்குறுதி வழங்கி இருந்தது. ஆனால் அந்த தேதிக்குள் சம்பளத்தை வழங்கமுடியவில்லை.
ஒவ்வொரு மாதமும் சம்பளத்துகாக 4 கோடி ரூபாய் தேவைப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிறுவனம் மீண்டும் செயல்பட வேண்டும் என்றால் ரூ.200 கோடி தேவைப்படும் `நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டிருக்கிறோம். விரைவில் நிறுவனம் செயல்படத் தொடங்கும்’ என ஏர் கோஸ்டா தகவல் தொடர்பு அதிகாரி தெரிவித்தார். 2013-ம் ஆண்டு இந்த நிறுவனம் செயல்படத்தொடங்கியது.