ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை, தேர்தலை மதிமுக புறக்கணிகிறது – வைகோ

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை மதிமுக புறக்கணிக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். அங்கு போட்டியிடும் எந்தக் கட்சிக்கும் ஆதரவு கொடுக்க மாட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார், மதிமுக உயர்நிலைக் குழு கூட்டம், அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமையில் சென்னை எழும்பூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு நிருபர்களிடம் வைகோ கூறியதாவது,

மதிமுக உயர்நிலைக் குழு கூட்டத்தில் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு கருத்துகளை விவாதித்தோம். ஏப்ரல் 12ஆம் தேதி நடக்கவுள்ள ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் குறித்தும் விவாதித்தோம். இடைத்தேர்தலை மதிமுக முற்றாக புறக்கணிப்பது என்று ஒருமித்த முடிவை எடுத்துள்ளோம். அதே நேரத்தில் ஆர்.கே.நகரில் போட்டியிடும் எந்தக் கட்சிக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதரவு கொடுக்க மாட்டோம். இவ்வாறு வைகோ கூறினார்.

தேர்தல் புறக்கணிப்புக்கு என்ன காரணம் என்று நிருபர் ஒருவர் கேட்டபோது, ‘‘புறக்கணிப்புக்கான காரணத்தை கூற முடியாது. இதற்கு முன்பு நடந்த தேர்தல்களை புறக்கணித்தபோதும் நாங்கள் காரணம் எதுவும் கூறவில்லை’’ என்றார் வைகோ. முன்னதாக, உயர்நிலைக் குழு கூட்டத்தில் இடைத்தேர்தலை புறக்கணிப்பது, மார்ச் 30ஆம் தேதி மதிமுக சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை சென்னையில் கொண்டாடுவது, மார்ச் 21ஆம் தேதி மது ஒழிப்புப் விழிப்புணர்வு பேரணி நடத்துவது, ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கை போர்க் குற்ற விசாரணை தொடர்பான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது தீர்மானத்தை எதிர்த்து இந்தியா வாக்களிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.