இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 451 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 603 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. 152 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 23 ரன்கள் எடுத்திருந்தது. ரென்ஷா 7 ரன்னுடன் களத்தில் இருந்தார்.
இன்று ஐந்தாவது நாள் ஆட்டம் தொடங்கியது. ரென்ஷாவுடன் ஸ்மித் களம் இறங்கினார். ரென்ஷா 15 ரன்கள் எடுத்த நிலையிலும், ஸ்மித் 21 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டம் இழந்தனர். அப்போது ஆஸ்திரேலியா 29.1 ஓவரில் 63 ரன்கள் எடுத்திருந்தது. ஐந்தாவது விக்கெட்டுக்கு ஷேன் மார்ஷ் உடன் ஹேண்ட்ஸ்காம்ப் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. புஜாரா – சகா ஜோடி எப்படி இந்தியாவை மீட்டதோ, அதேபோல் இந்த ஜோடி ஆஸ்திரேலியாவை தோல்வியில் இருந்து மீட்டது.
மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு விளையாடிய 2-வது செசனிலும், அதன்பின் நடைபெற்ற 3-வது செசனிலும் விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். இதற்கிடையே ஒன்றிரண்டு ரன்களாக திரட்டி இருவரும் அரைசதம் அடித்தனர். இறுதியாக ஆஸ்திரேலியா 35 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்தபோது மார்ஷ் 53 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து மேக்ஸ்வெல் களம் இறங்கினார். மேக்ஸ்வெல் 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்ததால் சற்று பரபரப்பு ஏற்பட்டது. 7-வது விக்கெட்டுக்கு ஹேண்ட்ஸ்காம்ப் உடன் வடே ஜோடி சேர்ந்தார்.
ஆஸ்திரேலியா 100 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்திருக்கும்போது ஆட்டத்தை முடித்துக் கொள்ள இரு அணி கேப்டன்களும் ஒப்புக் கொண்டதால் ஆட்டம் டிராவில் முடிந்ததாக நடுவர்கள் அறிவித்தனர். ஹேண்ட்ஸ்காம்ப் 72 ரன்னுடனும், வடே 9 ரன்னுடனும் களத்தில் இருந்தது. இந்திய அணி சார்பில் ஜடேஜா 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். ராஞ்சி டெஸ்ட் டிராவில் முடிந்துள்ளதால், தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. 4-வது மற்றும் கடைசி போட்டி 25ஆம் தேதி தரம்சாலாவில் நடக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி தொடரைக் கைப்பற்றும். இதனால் தரம்சாலா போட்டியில் இரு அணிகளும் வெற்றிக்காக போராடும் என்பதால் முதல் நாளில் இருந்தே போட்டி விறுவிறுப்பாக இருக்கும்.