டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய் பாதிப்புக்குள்ளான குழந்தைகளுக்கு சித்த மருத்துவத்தில் கசப்பு இல்லாத “ஆடாதொடை மணப்பாகு’ எனும் மருந்து உள்ளது. இதை அனைத்து அரசு சித்த மருத்துவமனைகள், மருந்தகங்களில் இருப்பு வைக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. தொற்று நோய்கள் பரவும் காலத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக நிலவேம்புக் குடிநீர், பப்பாளி இலைச்சாறு, மலைவேம்புக் குடிநீர் உள்ளிட்ட சித்த மருந்துகள் மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
இந்த நிலையில், வட கிழக்குப் பருவ மழையால், வைரஸ் காய்ச்சல், டெங்கு, சிக்குன் குனியா உள்ளிட்ட தொற்று நோய்கள் வேகமாகப் பரவி வருகின்றன. இதைக் கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. உள்உறுப்புகளில் ரத்த கசிவுக்கும் ஏற்றது. நிலவேம்புக் குடிநீர் இயற்கையாகவே கசப்புத்தன்மை வாய்ந்தது. இந்த நிலையில் குழந்தைகளுக்கு அதை புகட்டுவது சிரமமாக இருந்தது. எனவே, எளிதில் பருகும்படியான மருந்தை அறிமுகப்படுத்த அரசு ஆலோசித்தது.
இதில், “ஆடாதொடை மணப்பாகு’ எனும் இனிப்பு மருந்தை வழங்கலாம் என்று தமிழக அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. சளி, காய்ச்சல் பாதிப்புகளுக்கும், டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்கள் தீவிரமடைந்தால் உள்உறுப்புகளில் ஏற்படும் ரத்தக் கசிவுக்கும் இந்த மருந்து வழங்கப்பட்டு வந்தது. இதையடுத்து, இந்த மருந்தை அதிக அளவில் அனைத்து அரசு சித்த மருத்துவமனைகளிலும், மருந்தகங்களிலும் இருப்பு வைக்கும்படி தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
சித்த மருத்துவர்களின் ஆலோசனை தேவை: இது குறித்து சித்த மருத்துவர்கள் சிலர் கூறியது, 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு ஆடாதொடை மணப்பாகில் 2.5 – 5 மி.லி வரை எடுத்து, அதனை 10 மி.லி. நிலவேம்புக் குடிநீருடன் கலந்து கொடுக்க வேண்டும். இதை குழந்தைகள் எளிதில் பருகுவர். சித்த மருத்துவர்களின் ஆலோசனைப்படியே மருந்தைப் பருக வேண்டும் என்றனர்.