மல்லையா, வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடனை பா.ஜ., வசூலிக்கும்

மல்லையா வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகையை வசூல் செய்யும் பணியில், பா.ஜ., அரசு தீவிரம் காட்டி வருகிறது என மத்திய நிதித்துறை இணையமைச்சர் லோக்சபாவில் தெரிவித்தார். பொதுத்துறை வங்களிடம் இருந்து கடன் பெற்று, திரும்ப செலுத்தாதவர்கள் குறித்த கேள்விக்கு, மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார், லோக்சபாவில் அளித்த பதில்: நாட்டின் பல்வேறு பொதுத்துறை வங்கிகளில், பெரிய தொகையை கடனாகப் பெற்று, 9,130 பேர் அதை திரும்ப செலுத்தாமல் உள்ளனர். இவர்கள் கடனாகப் பெற்ற தொகை, 91 ஆயிரத்து, 155 கோடி ரூபாய்.

இவர்களிடமிருந்து கடன் தொகையை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.  மத்தியில், காங்., தலைமையிலான ஆட்சியின் போது, 8,040 கோடி ரூபாய் கடன் பெற்ற பிரபல மதுபான நிறுவன அதிபர், தற்போது, லண்டனில் தலைமறைவாக உள்ளார். அவரிடம் இருந்து கடனை திரும்பப் பெற, முந்தைய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த நபர் வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகையை வசூல் செய்யும் பணியில், பா.ஜ., அரசு தீவிரம் காட்டி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.