புதிய தோற்றத்தில், ‘விவேகம்’ படத்தில் அஜித்குமார்

அஜித்குமார் நடித்து வரும் ‘விவேகம்’ அவரது 57-வது படமாக வெளிவர இருக்கிறது. அதிரடி கதையம்சத்துடன் திகில் படமாக தயாராகிறது. இந்த படத்தை சிவா டைரக்டு செய்து வருகிறார். இவர் ஏற்கனவே அஜித்தை வைத்து வீரம், வேதாளம் என்ற இரண்டு படங்களை இயக்கி வெளியிட்டவர். இந்த படங்கள் வெற்றிகரமாக ஓடின. இதனால், ‘விவேகம்’ படத்தில் இருவரும் மீண்டும் இணைந்து இருக்கிறார்கள். தாதா, போலீஸ் அதிகாரி ஆகிய கதாபாத்திரங்களில் அஜித் மாறி மாறி நடித்து வருகிறார்.

இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று இருக்கிறது. மங்காத்தா படத்தில் போலீஸ் அதிகாரியாக வந்தார். வீரம், வேதாளம் படங்களில் தாதா வேடம் ஏற்றார். தற்போது விவேகம் படத்தில் மீண்டும் அதிரடி போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்துக்கு மாறி இருக்கிறார். உளவுத்துறை அதிகாரியாக அவர் வருகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் பல்கேரியாவில் தொடங்கியது. ஹெலிகாப்டர்கள், வெளிநாட்டு நடிகர்களை வைத்து 60 சதவீத படப்பிடிப்பை அங்கு முடித்து விட்டு சென்னை திரும்பினார்கள். தற்போது கடைசி கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் மீண்டும் பல்கேரியா புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

விவேகம் படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். கமல்ஹாசன் மகள் அக்‌ஷராஹாசனும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். பிரபல இந்தி நடிகர் விவேக் ஓபராய் வில்லன் வேடம் ஏற்றுள்ளார். ஆகஸ்டு மாதம் 10ஆம் தேதி படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.  இந்த நிலையில் விவேகம் படத்தில் அஜித்குமாரின் அதிரடி தோற்றம் வெளியாகி இருக்கிறது. வெடிகுண்டு தாக்குதலில் இருந்து அவர் மீண்டு வந்து ரத்தக்களறியுடன் நிற்பதுபோல் இந்த தோற்றம் இருக்கிறது. ஹாலிவுட் நடிகர்களைப் போல் இந்த தோற்றம் உள்ளதாக ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.