பக்ரீத் படத்தின் டீசர், பாடல்கள் முடக்கம் – ஸ்டார் இந்தியா (விஜய் டிவி) நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்த தயாரிப்பாளர் முருகராஜ்

விக்ராந்த நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘பக்ரீத்’. இதில் இவருக்கு ஜோடியாக வசுந்தரா நடித்துள்ளார். ஜெகதீசன் சுபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தை எம்10 புரொடக்‌ஷன்ஸ் சார்பாக முருகராஜ் தயாரித்திருக்கிறார்.

மனிதனுக்கும் விலங்குகளுக்கும் இடையேயான பாசத்தை உணர்த்தும் விதமாக உருவாக்கப்பட்டிருக்கும் இப்படம் இன்று (ஆகஸ்ட் 23) வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், யூடியூப்பில் பக்ரீத் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் முடக்கி இருக்கிறது.

இதுகுறித்து தயாரிப்பாளர் முருகராஜ் கூறும்போது, ‘ஸ்டார் மியூசிக் நிறுவனத்திடம் பக்ரீத் படத்தின் டீசர், பாடல்களை வெளியிடும் உரிமையை கொடுத்திருக்கிறேன். படம் வெளியாகும் நிலையில், நள்ளிரவு 1 மணியளவில் இதன் டீசர் மற்றும் பாடல்கள் ஸ்டார் இந்தியா (விஜய் டிவி) முடக்கியது. என்ன காரணம் என்று அவர்களிடம் தொடர்பு கொண்டால், தவறுதலாக அப்படி ஆகிவிட்டது என்று சாதாரணமாக கூறிவிட்டார்கள்.

ஏறக்குறைய 20 மணி நேரத்திற்கும் மேலாக முடக்கி இருக்கிறார்கள். இதனால் எனக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஸ்டார் இந்தியா (விஜய் டிவி) நிறுவனத்திற்கு வக்கீல் நோட்டிஸும் அனுப்பி இருக்கிறேன். பக்ரீத் படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், ஸ்டார் இந்தியா நிறுவனத்தால் நான் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன்’ என்றார்.

 
நன்றி,
தயாரிப்பாளர் முருகராஜ்
எம் 10 புரொடக்‌ஷன்ஸ்