மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்’ எனும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம் ஆகும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு, கடந்த மே மாதம் 3-ந் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது.
தற்போதுள்ள சூழ்நிலையில் தேர்வை நடத்த வேண்டாம் என சில மாநில அரசுகள், அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்புகள், திரை பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், தேர்வு நடத்தியே தீருவோம் என்ற முனைப்பில் மத்திய அரசு தீவிரமாக பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் இயக்குனர் அமீர் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. நாம் விரும்பினாலும், விரும்பா விட்டாலும் நம் மீது வழியே திணிக்கப்பட்டுள்ளது. நாளை நீட் தேர்வு நடக்க இருக்கிறது. நீட் தேர்வுக்கான போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும் கூட, இந்த தேர்வை எழுதி வெற்றி பெற வேண்டும் என்ற அவசியம் நமக்கு இருக்கிறது. உங்களால் நிச்சயம் நீட் தேர்வில் வெற்றி பெற முடியும்.
உங்களால் முடியும் என்ற நம்பிக்கையோடும், உங்களது பெற்றோர்களின் எதிர்காலம், நாட்டின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு, நீட் தேர்வை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். வெற்றி பெறுவோம். நிச்சயமாக சூழ்ச்சிகளில் நாம் தோற்றுவிட கூடாது என்ற காரணத்திற்காகவும், எதிர்கொண்டு வெற்றி பெறுவோம். வெற்றி உங்கள் பக்கம். வாழ்த்துகள். என்று கூறியிருக்கிறார்.