இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இந்த நாட்டில் ஒவ்வொரு தனி மனிதனும் தன்னுடைய கருத்தை பொது வெளியில் பகிர்ந்து கொள்ளக் கூடிய உரிமையை அரசியல் சாசனம் நம் அனைவருக்கும் வழங்கி உள்ளது. அது போல் ஒவ்வொருவரும் தாம் விரும்பிய ( சட்டம் அனுமதித்த ) தொழிலை செய்வதற்கும் மக்கள் அனைவருக்கும் உரிமை உள்ளது. அந்த வகையில் தன் தொழிலான நடிப்பின் மூலம் முத்தையா முரளிதரன் எனும் கிரிக்கெட் வீரரின் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க நடிகர் விஜயசேதுபதி ஒப்புக்கொண்டார்.
முத்தையா முரளிதரன் என்பவரின் வாழ்க்கை வரலாற்றுப் பிண்ணனியில் இன்னும் முடிவு பெறாத, நீதி கிடைக்கப் பெறாத ஈழ அரசியல் இருக்கின்ற காரணத்தாலும் லட்சக்கணக்கான தமிழ் மக்களின் இனப்படுகொலை வரலாறு இருப்பதாலும் அந்தக் கதாபாத்திரத்தை தவிர்த்து விடுங்கள் என்று நடிகர் விஜயசேதுபதியின் மீது அன்பு கொண்டவர்களும் ஈழ அரசியலின் மீது ஆர்வம் கொண்டவர்களும் பெரும்பான்மை தமிழ்ச் சமூகமும் உலகெங்கும் வாழும் ஈழச் சொந்தங்களும் நடிகர் விஜயசேதுபதியிடம் கோரிக்கை வைத்தனர். சிலர் கடும் சொற்களால் எதிர்ப்பும் தெரிவித்தனர்.
அந்தக் கோரிக்கை மற்றும் எதிர்ப்பின் பலனாக முத்தையா முரளிதரன் அவர்களே தனது படத்திலிருந்து விலகிக்கொள்ளுங்கள் என்று நடிகர் விஜயசேதுபதியை கேட்டுக் கொண்டதன் பேரில் 800 எனும் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்திலிருந்து நடிகர் விஜயசேதுபதி விலகிக்கொண்டார் என்பது நாம் அறிந்ததே.
இந்நிலையில் அவர் மீது கொண்ட கோபத்தின் காரணமாகவும் அவரை இழிவுபடுத்தும் நோக்கத்தோடும் அவரின் மகளை தவறாகப் பேசியும் மிரட்டும் பாணியிலும் சிலர் பொது வெளியில் கருத்துக்களை பதிவிட்டிருப்பது அநாகரீகத்தின் உச்சம் என்றும் அநீதியான செயல் என்றும் நான் வண்மையாகக் கண்டிக்கிறேன். பொது வெளியில் பயணிக்கிற ஒவ்வொரு மனிதனின் செயலுக்காக அவரது குடும்பத்தினரை அவமானப்படுத்துவதும் பொது வெளியில் நச்சுக் கருத்துக்களை பதிவிடுவதும் நல்லதல்ல. அது ஒரு நல்ல சமூகத்தின் அடையாளம் கிடையாது. மேலும் அப்படிச் செய்பவர்கள் நல்ல தமிழ்த்தாய்க்கு பிள்ளையாகப் பிறந்திருக்க வாய்ப்பில்லை என்றே நான் கருதுகிறேன்.
இது போன்ற நிகழ்வுகள் இன்னொரு முறை நம் மண்ணில் நடைபெறாத வண்ணம் தடுக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையுமாகும். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட கயவர்களை கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியதும் நமது அரசாங்கம் மற்றும் காவல் துறையின் தலையாய கடமையுமாகும் என வேண்டுகிறேன்.
அன்புடன்
இயக்குநர் அமீர்
21:10:2020