இயக்குநர் ஜனநாதன் மறைவுக்கு தமிழ்க்கலை இலக்கியப்பேரவை அகவணக்கம்

1953 இல் தஞ்சை மாவட்டம் – வடசேரி எனும் ஊரில் பிறந்தவர் இயக்குநர் ஜனநாதன். பொதுவுடைமை அரசியலை கலைவடிவத்தில் வார்த்தெடுத்த ஆகச்சிறந்த திரை ஆளுமை இயக்குநர் ஜனநாதன் அவர்கள்.

தனது முதல் படைப்பாக ”இயற்கை” எனும் காதல் காவியத்தை படைத்த இயக்குநர் ஜனநாதன், இயற்கை எய்திவிட்டார் எனும்போது மனம் படபடத்து உலக்கிவிட்டது. சில நாட்களாக சிறந்த திரை ஆளுமைகளெல்லாம் நம்மை விட்டு பிரியும் போது ஏதோ ஒருவித பயம் நம்மை சூழ்ந்து நிற்கிறது.

இலாபம், என்ற திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த இயக்குநர் ஜனநாதன் அவர்களுக்கு 2 நெஞ்சாங்குலை தாக்குதலோடு, மூளையில் குருதிக்கசிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். மருத்துவம் பலனளிக்காமல் இன்று 14.03.2021 அன்று மரண மடைந்தார்.

இயக்குநர் ஜனநாதன் அவர்கள் “இயற்கை, பேராண்மை, ஈ, புறம்போக்கு உள்ளிட்ட படங்களின் ஊடாக வலுவான சமூக்கருத்தியலை மக்கள் முன் வைத்தவர், பொதுவுடைமைத் தத்துவத்தை தனது கொள்கையாக ஏற்று தமது திரைப்படங்களில் அதை அழுத்தமாக பதிவு செய்தவர் இயக்குநர் ஜனநாதன்!

பல முறை நான் அவரை சந்தித்து உரையாடி உள்ளேன். தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டத்தின் படிக்குநராகவும் பயணித்தவர். அவரது பேராண்மை படம் குறித்து நான் கண்ணோட்டத்தில் எழுதியவைகளை “ சில கருத்துகளை மேற்கோளிட்டு” அவரது பட விளம்பரங்களில் பயன்படுத்தினார். கருத்தின் கீழே தமிழர் கண்ணோட்ட மாத இதழை பத்திரிகைகளில் பதிவு செய்தார். அவ்வபோது நான் சந்திக்கும் போதெல்லாம், மார்க்சிய லெனிய சித்தாந்தங்களில் ஊடாக நின்று ஒரு கருத்தை ஒருமணிநேரம் விவாதிப்பார்.

இராசராசன் சோழன் வரலாற்றை படமாக்க வேண்டும் என்பது அவரது நீண்டநாள் கனவு. அது குறித்து என்னிடம் பேசினார். நான் அது குறித்த சில நூல்களை அவருக்கு கொடுத்த நினைவு இப்போது என் மனத்தை ஈரமாக்குகிறது.

பொதுவுடைமைக் கருத்தில் வலுவாக நின்று கலைப்படைப்பு செய்த படைப்பாளி, பொதுவுடைமைப் புரட்சியாளர் கார்ல் மார்க்ஸ் நினைவு நாளிலேயே இறந்து விட்டார். அவர் மறைந்தாலும் அவரது படைப்புகள் மறையாது. தமது பொதுவுடைமை கலைப் படைப்புகள் வழியாக மனித சமுத்துவத்தை பேசிய அவரது திரைப்படங்கள் வரலாற்றில் எப்போதும் நிலைத்து நிற்கும்.

– இங்ஙனம்
கவிபாஸ்கர்
தலைவர், தமிழ்க்கலை இலக்கியப் பேரவை