சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பிரபல சிட் ஃபண்ட் நிறுவனம் ‘ஸ்ரீ கோகுலம் சிட் பண்ட் & பைனான்ஸ்’ நிறுவனம். இதன் நிறுவனர் ‘கோகுலம்’ கோபாலன். இந்த நிறுவனம் தவிர தமிழ்நாடு உட்பட பல இடங்களில் கல்வி நிறுவனங்களையும், ஹோட்டல்களையும், மருத்துவமனைகளையும் நிர்வகித்து வரும் ‘கோகுலம்’ கோபாலன் ஒரு திரைப்பட தயாரிப்பாளரும் கூட ஆவார். தமிழில் வெளியான ‘தூங்காவனம்’, ‘தனுசு ராசி நேயர்களே’ மலையாளத்தில் வெளியான ‘பழசிராஜா’, ‘காயங்குளம் கொச்சுண்ணி’ உள்பட பல படங்களை தயாரித்தவர் ‘கோகுலம்’ கோபாலன். சென்னையில் இயங்கி வரும் ‘ஸ்ரீ கோகுலம் ஸ்டுடியோஸ்’ என்ற சினிமா நிறுவனத்தின் அதிபரும் இவரே!இப்படி பல்வேறு துறைகளில் கால் பதித்து சிறந்த ஒரு தொழிலதிபராக விளங்கி வரும் ‘கோகுலம்’ கோபாலன் பேரிடர் காலங்களில் மக்களுக்கு உதவி செய்வதிலும் கவனம் செலுத்தி வருபவர் ஆவார்!
இப்போது நம் நாட்டில், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் கொரோணா எனும் கொடிய தொற்று நோயின் இரண்டாம் அலைவரிசை காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படி பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சரின் நிவாரண நிதிக்காக ‘கோகுலம்’ கோபாலன் 1 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளார். இதற்கான காசோலையை இன்று (10-6-21) தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து ‘கோகுலம்’ கோபாலன் வழங்கினார். அப்போது அவருடன் ‘கோகுலம் சிட் பண்ட்’ நிறுவனத்தின் எக்சிக்யூட்டீவ் டைரக்டர் பைஜு கோபாலன், ‘Director Operations’ பிரவீன் ஆகியோரும் இருந்தனர்.