அகோரியாக மிரட்ட காத்திருக்கும் அறிமுக ஹீரோ ராஜேஷ் கண்ணா

பத்ரா பிலிம் பேக்டரி சார்பில் என்.ஆர்.ஜி.ராஜேஷ் கண்ணா, என்.ஆர்.ஜி.சசிகலா ஆகியோர் தயாரிக்கும் படம் ‘மாரஹாதிபதி’. அறிமுக இயக்குநர் கெளதம் வெங்கட் இயக்கும் இப்படத்தில் ஹீரோவாக ராஜேஷ் கண்ணா அறிமுகமாகிறார். ஹீரோயினாக அஷ்மிதா நடிக்கிறார். இவர்களுடன் இமான் அண்ணாச்சி, ராஜசிம்மன், ரஞ்சன் குமார், கராத்தே ராஜா, சேரன்ராஜ், லொள்ளு சபா மனோகர், திருப்பூர் ராஜேஷ், சென்ட்ரல் சுரேஷ், சிவம் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

தலைப்பை போலவே வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இப்படம் திகில் படமாக இருந்தாலும், இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத வசிய மோகினி பேயை மையமாக வைத்து இப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து இயக்குநர் கெளதம் வெங்கட் கூறுகையில், “’மாரஹாதிபதி’ என்றால் மரணத்தின் அதிபதி என்று அர்த்தம். 100 ஆண்டுகளுக்கு முன்பு நடக்கும் கதையம்சம் கொண்ட இப்படத்தில், தற்போதைய காலக்கட்டத்தில் நடப்பது போன்ற கதையுடனும் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

யாரும் இல்லாதா அனாதையான ஹீரோ, தன்னை போல உள்ள சிறுவர்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார். அப்போது அவர் உருவத்தில் சில மாற்றங்கள் ஏற்படுகிறது. அது பற்றி அறிந்துக் கொள்வதற்காக மாயை மாந்திரிகங்கள் செய்யக்கூடிய சில ஊர்களுக்கு செல்லும் ஹீரோ, ஒரு கிராமத்திற்கு செல்லும் போது தான் யார்? என்பதை தெரிந்துக்கொள்வதோடு, அந்த ஊரில் உள்ள வசிய மோகினியிடம் சிக்கிக்கொள்கிறார். அந்த ஊரையே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அந்த வசிய மோகினியிடம் இருந்து ஹீரோ தப்பித்தாரா இல்லையா, ஹீரோவின் பின்னணி என்ன, அவருக்கும் அந்த மோகினிக்கும் என்ன தொடர்பு, என்பதை தான் திகிலாக சொல்லியிருக்கிறோம்.

பேய் படங்கள் பல வந்தாலும், எங்களது படத்தில் பேய் படமாக மட்டும் இன்றி சுவாரஸ்யமிக்க இஸ்டாரிக்கல் படமாகவும் சொல்லியிருக்கிறோம். ஹீரோ ராஜேஷ் கண்ணாவின் கதாபாத்திரம் வில்லன் மற்றும் ஹீரோ என்று இரண்டு முகங்களை கொண்டதாக இருப்பது போல, ஹீரோயினுக்கும் கதையில் முக்கியத்துவம் உள்ளது.

இதில் சில எப்பிசோட்கள் அகோரிகள் சம்மந்தப்பட்டவையாகவும் வருகின்றன. அதற்காக ஹீரோ நான்கு மணி நேரம் மேக்கப் போட்டு, நிஜமான அகோரிபோலவே நடித்திருக்கிறார். முதல் படத்திலேயே மூன்று கெட்டப்புகளில், அதிலும் அகோரியாக நடித்தது ராஜேஷ் கண்ணா படக்குழுவினரிடம் பாராட்டு பெற்று விட்டார். அவருக்கு இது முதல் படம் என்றால், நிச்சயம் நம்ப மாட்டார்கள், அந்த அளவுக்கு படம் முழுவதையும் தனது பர்பாமன்ஸ் மூலம் நகர்த்திச் சென்றிருக்கிறார்.” என்றார்.

சாந்தன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு லலித் ஆனந்த், கெளதம் வெங்கட் ஆகியோர் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள். தர்வேஷ் – நிஜாம் என்ற இரட்டையர்கள் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு காளிதாஸ் படத்தொகுப்பு செய்ய, மிரட்டல் செல்வா சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். கெளசல்யா நடனம் அமைக்க, திருப்பூர் ராஜேஷ் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார். மக்கள் தொடர்பு பணியை கோவிந்தராஜ் கவனிக்கிறார்.

காரைக்குடி, மணப்பாறை, இளம்மனம் மற்றும் அப்பகுதியில் உள்ள மலைப்பகுதிகளில் படமாக்கப்பட்டு வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.