நீட் தேர்வினை மாணவர்கள் எதிர்கொள்ளும் முறையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது- அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ

கோவில்பட்டி அருகேயுள்ள வில்லிசேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணிணி வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ கலந்து 81 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணிணி வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் கல்வி மாவட்ட அலுவலர் சின்ராஜ், வில்லிசேரி மேல்நிலைபள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேஷ், அதிமுக ஒன்றிய செயலாளர் அய்யாத்துரைபாண்டியன், ராமசந்திரன், ரமேஷ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், பழனிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ செய்தியாளர்களிடம் பேசுகையில் இந்தியாவில் கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கி பல்வேறு திட்டங்களை செயல்படுத்திய மாநிலம் தமிழகம் தான்.

இலவச சீருடை, புத்தகம், நோட்டு, விலையில்லா சைக்கிள், கல்வி உதவி தொகை என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொலை நோக்கு திட்டமாக மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணிணி வழங்கப்பட்டு வருகிறது.இந்தாண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் 13581 மடிக்கணிணிகள் வழங்கப்படவுள்ளது. நீட் தேர்வு தேவையில்லை என்பது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொள்கை, அதனை நிறைவேற்றும் வகையில் தமிழகம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பலமுறை பிரதமர் மோடியை சந்தித்து நீட்க்கு விலக்கு அளிக்க கோரினார். ஓராண்டாவது விலக்கு பெற அவசர சட்டங்கள் கூட நிறைவேற்றப்பட்டது.

ஆனால் நீதிமன்ற உத்தரவின் காரணமாக இன்றைக்கு தமிழகத்தில் நீட் தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் மாணவர்கள் நீட்தேர்வினை எளிதில் எதிர்கொள்ளும் வகையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.பள்ளி கல்வித்துறையில் அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஸ்மார்ட் கார்டு, ஸ்மார்ட்க்ளாஸ், 50 ஆயிரம் கேள்வி வினாத்தாள், 482 சிறப்பு பயிற்சிமையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நகரத்தில் உள்ள மாணவர்கள் மட்டுமின்றி கிராமங்களில் உள்ள அரசு பள்ளி மாணவர்களும் நீட்தேர்வினை எளிதில் எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டங்கள் மாற்றபட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,வருகின்ற காலங்களில் நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் சிறப்பிடம் பெறுவதற்கு இது போன்ற நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கும் என்றார்.