கணவனைப் பிரிந்து வாழாவெட்டியாய் வந்துவிட்ட மகளை நினைத்து வேதனையில் இருக்கிறார் ‘பூ’ ராமு. பேரனை கஷ்டப்பட்டு நன்றாக வளர்த்து படிக்கச் வைத்து, சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டால் மகளுடைய வாழ்க்கை தன் காலத்துக்குப் பிறகு நல்லபடியாக இருக்கும் என்ற எண்ணிக்கொண்டிருக்கிறார்.
ஆனால் பேரோனோ, படிக்கும் போதே காதலில் விழுகிறார். இதை தெரிந்து கொண்ட தாத்தா ‘பூ’ ராமு பேரனுக்கு அறிவுரை கூறுகிறார். தாத்தாவுக்கு மரியாதை கொடுத்து காதலை விட்டு விடுகிறார். ஆனால், அந்த காதலியோ அவரையே சுற்றி சுற்றி வருகிறார்.
பிறகு காதலியின் காதலை ஏற்றுக்கொண்டாரா? இல்லை தாத்தாவின் பேச்சை கேட்டு குடும்பத்துக்காக காதலை தள்ளி வைத்தாரா? என்பதே நெடுநல்வாடை படத்தின் மீதிக்கதை.
கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாமல் எளிமையான நடிப்பால் நம் தாத்தாவாக மனதுக்குள் இடம்பிடிக்கிறார் ‘பூ’ ராமு.
அழகும், சிரிப்புமாக, கண்களிலே பேசி பெண்களையும் சேர்த்தே கவர்கிறார் அஞ்சலி நாயர். மிகப்பொருத்தமாக இருக்கிறார் கிராமத்துக் கதாநாயகன் கேரக்டருக்கு இளங்கோ.
தாய்மாமாவாக வரும் ‘மைம்’ கோபியும், நம்பியாக வரும் ஐந்துகோவிலானும் ஈர்க்கிறார்கள். நிறைய புதுமுகங்கள் அனைவரின் நடிப்பையும் பாராட்டலாம்.
வைரமுத்துவின் வரிகளில் பாடல்கள் அனைத்தையும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். ஜோஸ் ஃபிராங்ளின் இசையும் அருமை.
“நல்லாருப்ப. காலம் பூராம் நீ தனியா கெடந்து என்ன சித்ரவதைப் பண்ணாத”, ஒரு பொண்ணு மனசுல ஒருத்தன நெனச்சுட்டு, ஒருத்தனோட வாழுற கொடுமை அனுபவிக்குறவுங்களுக்குதான் தெரியும்’, வசனங்கள் நிறைய பெண்களின் மனதை பிரதிபலிக்குறது.
வழக்கமான கிராமத்துக் காதல் கதையாக இருந்தாலும் அதை வேறுகோணத்தில் கொடுத்திருக்கும் இயக்குனர் செல்வக்கணனை மனதார பாராட்டலாம்.
நெடுநல்வாடை எல்லோர் மனதிலும் ஏதோ ஒரு நினைவை வீசி செல்லும்.