ஆச்சர்யப்படுத்தும் ஃபர்ஸ்ட்லுக் வெளியான நாளில் இருந்தே நயன்தாராவின் ‘ஐரா’ அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திழுத்திருக்கிறது. நயன்தாராவின் இரட்டை கதாபாத்திரங்களை பார்க்கும் போது ஆர்வம் மிகவும் அதிகமாகி இருக்கிறது. குறிப்பாக யாரும் கற்பனை செய்து பார்க்காத ஒரு கருப்பு நிற பெண்ணாகவும் நடித்து நம்மை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார். இந்த படத்தின் கதை என்னவென்பதை பற்றி நிறைய வினோதமான ஆராய்ச்சிகள் நடைபெற்றுள்ளன. அதே நேரத்தில் படக்குழு படத்தை குறித்த நேரத்தில் முடித்திருக்கிறது.
“நயன்தாரா மேடம் உடன் பணிபுரிவது எப்போதுமே எந்த ஒரு தயாரிப்பாளருக்கும் ஒரு மென்மையான அனுபவம், குறிப்பாக எனக்கு. மேலும், ஒவ்வொரு படத்திலும் பல்வேறு கதாபாத்திரங்களை பரிசோதனை செய்து பார்க்கும் அவரது திறமையை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. தனிப்பட்ட முறையில், அவரின் நடிப்பு எங்கள் முந்தைய படமான அறம் படத்தில் இருந்து ஐராவில் இன்னும் பெருகி இருக்கிறது. ஒரே நேரத்தில் பல படங்களில், பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும், ஐராவிற்கு அவர் தந்த முக்கியத்துவம் சிறப்பானது. உண்மையில், அவரின் இரண்டு கதாபாத்திரங்களில் ஒரு கதாப்பாத்திரத்துக்கு கடும் உழைப்பு தேவைப்பட்டது. அதை அவர் சிறப்பாக செய்தார். எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு நட்சத்திரமாக இருந்தாலும், தோற்றத்தை மட்டும் பாராமல், எல்லா விதமான கதாபாத்திரங்களையும் எடுத்து நடிக்கும் அவரது உழைப்பு தான் தென்னிந்திய சினிமாவின் ராணியாக உருவாக்கியிருக்கிறது” என்றார் கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் கோட்டபாடி ஜே ராஜேஷ்.
இயக்குனர் கேஎம் சர்ஜூன் பற்றி அவர் கூறும்போது, “தொடக்கத்தில் இருந்து இறுதி வரை தயாரிப்பாளரின் இயக்குநராக இருந்திருக்கிறார். தனது திறமைகளை நிரூபிக்கும் திரைப்படமாக மட்டும் இதை கருதாமல், நயன்தாரா மேடமிற்கு ஒரு சிறப்புப் படமாக இருக்க வேண்டும் என உழைத்தார். எனெனில் இது நயன்தாரா இரட்டை வேடத்தில் நடிக்கும் முதல் திரைப்படம். தொழில்நுட்ப கலைஞர்கள் ஸ்கிரிப்ட்டில் என்ன கலந்துரையாடினார்களோ அதை திரையில் கொண்டு வர கடுமையாக உழைத்துள்ளனர்.
ஐரா (யானை) ஒரு சூப்பர்நேச்சுரல் திரில்லர் படம். கலையரசன், யோகிபாபு, ஜே.பீ மற்றும் பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கே.எஸ். சுந்தரமூர்த்தி இசையமைக்கிறார். கார்த்திக் ஜோகேஷ் எடிட்டிங் செய்ய, சுதர்ஷன் சீனிவாசன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
‘அவள்’ பட புகழ் சிவ சங்கர் கலை இயக்குனராகவும், டி ஏழுமலை நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். கதை & திரைக்கதை பிரியங்கா ரவீந்திரன், வசனம் மற்றும் இயக்கம் கே. எம் சர்ஜூன்.