நடிகர் ஹரிஷ் உத்தமன் பேசுகையில், பல படங்களில் சண்டை அடிதடி என்று நடித்தாயிற்று, சற்று வித்தியாசமான பாத்திரம் கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என்று நினைத்தேன். அதுபோலவே இப்படத்தில் கிடைத்ததில் மகிழ்ச்சி. நான் நடித்த படங்களிலேயே இந்த படம் தான் எனக்கு மிகவும் பிடித்த படம். நடன இயக்குனர் சிவராஜ் ஷங்கர் பேசுகையில், மீசைய முறுக்கு படத்திற்கு பிறகு ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதியுடனும் சுந்தர்.சியுடனும் பணியாற்றுவதில் மகிழ்ச்சி. இப்படம் எனக்கு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது.நடிகர் ராஜ்மோகன் பேசுகையில், ஒவ்வொரு கல்லூரிக்கும் நேர்மறையான எண்ணங்களை ஏற்படுத்த செல்வேன். ஆனால் ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி தன் படம் மூலமாக நேர்மறையான சிந்தனையை கூறியிருக்கிறார்.
நடிகர் எரும சாணி விஜய் பேசுகையில், இப்படத்தின் மூலம் எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். இப்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கும் சுந்தர்.சிக்கும் எனது நன்றி.
நடிகர் வினோத் பேசுகையில், மீசைய முறுக்கு படத்தில் சில காட்சிகளில் நடித்திருந்தாலும் எல்லோர் மனதிலும் பதியும்படி இருந்தது. அதேபோல் இப்படத்திலும் நல்ல கதாபாத்திரத்தில் PT மாஸ்டராக நடித்திருக்கிறேன். என் கதாபாத்திரம் நிச்சயம் பேசப்படும்.
நடிகர் பழைய ஜோக் தங்கதுரை பேசுகையில், ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதியின் நண்பனாக நடித்திருக்கிறேன். அவர் படத்தில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் நண்பர் தான்.
கதையாசிரியர் தேவேஷ் பேசுகையில்,கதை, திரைக்கதை மற்றும் வசனம் போன்றவற்றை நானும் ஸ்ரீகாந்தும் இணைந்து பணியாற்றியிருக்கிறோம்.
நடிகர் RJ விக்னேஷ் காந்த் பேசுகையில், சினிமாவில் பிள்ளையார் சுழி போட்டது ஹிப்ஹாப் ஆதி மற்றும் சுந்தர்.சி ஆகியோர் தான். நான் கேட்ட கதாபாத்திரத்தையே எனக்கு கொடுத்ததற்கு ஆதிக்கு நன்றி. இப்படத்தில் அனைத்து பாடல்களும் நன்றாக வந்துள்ளது. குறிப்பாக ‘ஆத்தாடி’ பாடல் காட்சிகள் மிக நன்றாக வந்துள்ளது.
நடிகர் சுட்டி அரவிந்த் பேசுகையில், இப்படத்தில் பணியாற்றியதில் மகிழ்ச்சி. சுந்தர்.சி அண்ணாவுடன் மிக நெருக்கம் ஏற்பட்டது.
கதாநாயகி அனகா பேசுகையில், தமிழில் முதல் படம். ஹாக்கி வீராங்கனையாக நடித்திருக்கிறேன். ஆதியுடன் நடித்ததில் மகிழ்ச்சி. இசையைத் தாண்டி அவர் நல்ல நடிகரும் கூட என்பதை மீசைய முறுக்கு படம் நிரூபித்தது.
இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு பேசுகையில், இப்படத்தை பற்றி குறிப்பிட்டு யாரையும் கூறமுடியாது. படத்தை விளையாட்டு களமாக தேர்ந்தெடுத்திருக்கிறோம். புதுமையான களமாக இருக்க வேண்டும் என்பதற்காக பாண்டிசேரியைத் தேர்ந்தெடுத்தோம். அந்த களத்தில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 3,000 ரூபாய் கட்டணம் கொடுத்து பயிற்சியளித்தோம். சாதாரண களத்தில் விளையாடுவதைவிட ஹாக்கி டர்ஃபில் விளையாடுவது மிகவும் கடினம். நிஜ வீரர்களுக்கே தொடர்ந்து விளையாடுவது இயலாது. அப்படி இருக்கையில் இவர்கள் அனைவரும் நாள் முழுக்க இடைவிடாமல் நடித்தார்கள். தினமும் ஒருவர் மயங்கி விழுவார். ஆதிக்கு கழுத்தில் அடிபட்டும் மனம் தளராமல் சிறிது இடைவெளியில் மீண்டும் நடித்து முடித்தார். மேலும் இப்படத்தில் நடித்த அனைவருமே தங்களுடைய சொந்த படமாக நினைத்து பணியாற்றினார்கள்.
பாண்டிச்சேரியில் இருப்பவர்கள் என்றாலே மது அருந்துவார்கள், புகைபிடிப்பார்கள் என்ற ஒரு தவறான எண்ணம் எல்லோர் மனதிலும் நிலவும். ஆனால் இப்படத்தில் பாண்டிச்சேரியில் இருக்கும் இளைஞர்கள் பெருமை படலாம்.
‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி பேசுகையில், அதிக வாய் பேசிய என்னை ‘ஆம்பள’யில் அறிமுகப்படுத்தி, ‘மீசைய முறுக்கு’-ல் என் கனவை நனவாக்கி ‘நட்பே துணை’யில் இப்படியொரு வாய்ப்பை கொடுத்த சுந்தர்.சி அண்ணாவுக்கு நன்றி.
இப்படத்தின் கதையைக் கூறும்போதே பெரிய தொகை செலவாகும் என்று தெரிந்தது. சுந்தர்.சி அண்ணாவிடம் கூறியதும் தயாரிக்க சம்மதித்தார்.
மீசைய முறுக்கு படத்தில் இருக்கும் மொத்த குழுவும் இணைந்து பணியாற்றியிருக்கிறோம். தேவேஷ் மற்றும் ஸ்ரீகாந்த் இருவரும் அவர்களின் வேலையை ஒத்திவைத்து எனக்காக இப்படத்தை முடித்துக் கொடுத்தார்கள்.
பள்ளியில் கூடைப்பந்து விளையாடியிருக்கிறேன். இப்படத்திற்காக ஹாக்கி விளையாடியிருக்கிறேன். இதில் இரண்டு குழுவில் 22 பேரில் 10 பேர் நிஜ ஹாக்கி வீரர்கள். அவர்களுக்கு இணையாக விளையாட வேண்டும் என்பதற்காக தீவிரமாக பயிற்சி எடுத்தோம். அதற்காக ஹாக்கி பயிற்சியாளர் குணசீலன் பயிற்சியளித்தார். ஒருநாள் ‘ஹாக்கி ஸ்டிக்’ என்று கூறுவதற்கு பதில் ‘பேட்’ என்று கூறிவிட்டேன். அதற்காக இரண்டு சுற்று ஓட விட்டார். எங்களுடன் அனகாவும் காலில் அடிபட்டும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டார்இப்படத்தின் கடைசி 35 நிமிடங்கள் எங்களுடைய அர்ப்பணிப்பு அனைவருக்கும் தெரியும்.
கரு.பழனியப்பன் முக்கியமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருடைய கதாபாத்திரம் எல்லோராலும் பேசப்படும்.
மது, புகை இல்லாமல் இப்படம் இருக்க வேண்டும் என்று இயக்குநரிடம் கேட்டுக்கொண்டேன். அவரும் அதை ஏற்றுக் கொண்டு படமெடுத்தார். குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் சென்று பார்க்ககூடிய படமாக இருக்கும்.