மைசூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார். இவர் ஜீப்பில் சிக்கல்லி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தார். ஜீப்பை டிரைவர் லட்சுமண் ஓட்டினார். ஜீப்பின் முன் இருக்கையில் இன்ஸ்பெக்டர் அமர்ந்து பயணம் செய்தார். தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது ஜீப் திடீர் என்று சாலையின் நடுவில் இருந்த தடுப்பு மீது மோதியது. அதன்பிறகு அடுத்த சாலையில் பாய்ந்து அதில் சென்று கொண்டு இருந்த பஸ் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் இன்ஸ்பெக்டரும், டிரைவரும் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தனர். விபத்து நடந்த போது அந்த வழியாக சென்றவர்கள் வேடிக்கை பார்த்தனர். உயிருக்கு போராடியவர்களை காப்பாற்ற முன் வராமல் செல்போனில் வீடியோ எடுப்பதில் கவனம் செலுத்தினார்கள். அதன்பிறகு ஆம்புலன்ஸ் வந்து இருவரையும் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இருவரும் கவலைக்கிடமாக உள்ளனர். யாரும் காப்பாற்ற முன்வராததால் அதிக அளவு ரத்தம் வெளியேறி இருக்கிறது என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இதுபோன்று விபத்துக்களில் சிக்கியவர்களை காப்பாற்றும் மனபக்குவம் மங்கி வருகிறது. செல்போனில் படம் பிடித்தும், வீடியோ எடுத்தும் ரசிப்பதில்தான் ஆர்வம் காட்டுகிறார்கள். எனவே மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.