‘மை கர்மா’ என்கிற ஆப் உருவாக்கிய நடிகர் சுரேஷ் சந்திர மேனன்

இயக்குநர் மற்றும் நடிகர் சுரேஷ் சந்திர மேனன் My Karma App என்ற க்விஸ் அப்ளிகேஷனை உருவாக்கியிருக்கிறார். அதனை பற்றிய அறிமுக பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. சுரேஷ் சந்திர மேனன் கலந்து கொண்டு ஆப்பை அறிமுகப்படுத்தி, விளக்கினார்.

அவர் பேசும்போது, “என்னை ஒரு ஒளிப்பதிவாளராக, இயக்குனராக, நடிகராக  பார்த்திருப்பீர்கள். 40 வருடமாக இந்த துறையில் இருந்து வருகிறேன். சினிமா இயக்கியிருக்கிறேன், டிவி சீரியல்கள், பல்வேறு டாகுமெண்டரிகள் எடுத்திருக்கிறேன். தற்போது லூசிஃபர், அடங்க மறு, காளிதாஸ், பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்திருக்கிறேன்.

நடிப்பதை தாண்டி பல்வேறு சமூக வளர்ச்சி திட்டங்களை செய்ல்படுத்துவதில் ஆர்வம் உண்டு. மக்கள் பயன்பெறும் நிறைய திட்டங்களை வடிவமைத்து தந்திருக்கிறேன். கண்டெய்னர் மூலம் பெண்களுக்கு கழிப்பிடம் கட்டி கொடுத்திருக்கிறேன். சென்னை காவல்துறைக்கு பல ட்ராஃபிக் கண்ட்ரோல் ஐடியாக்கள் செய்து கொடுத்திருக்கிறேன். ஒரு குடிமகனாக இதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறேன்.

மை கர்மா ஆப்பை உருவாக்க முக்கிய காரணம் இந்த தலைமுறைக்கு பொது அறிவை பற்றிய புரிதலோ, ஈடுபாடோ இல்லை. அவர்களை ஈர்க்க மொபைலில் இந்த மாதிரி ஒரு ஆப் உருவாக்க நினைத்தேன். முழுக்க முழுக்க இது மொபைல் யுகம். ஆப் தான் எதிர்காலம். அதனால் தான் இதை தேர்ந்தெடுத்தேன். இதில் எனக்கும் பயனாளிக்கும் மட்டுமே நேரடி தொடர்பு. நடுவில் எந்த ஏஜண்டும் கிடையாது. மக்கள் டிஜிட்டல் மணியை உபயோகிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். மொபைலை மட்டுமே உலகம் என நினைத்திருக்கிறார்கள். கர்மா என்பது தேசிய அளவில் தெரிந்த ஒரு வார்த்தை. அதனால் இந்த அப்ளிகேஷனுக்கு அந்த பெயரை வைத்திருக்கிறோம்.

இந்த க்விஸ் விளையாட்டில் கேள்விக்கு 4 சாய்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும். இதை விளையாடுவதன் மூலம் தெரியாத விஷயங்களை கூட தெரிந்து கொள்ளலாம். Learn, Earn, Return என்பது தான் இந்த ஆப்பின் டேக்லைன். இரவு 7 முதல் 9 மணி வரை தினமும் இந்த விளையாட்டை விளையாடலாம்.

இதில் விளையாடி பொது அறிவை வளர்க்கலாம், பணம் சம்பாதிக்கலாம், பொது சேவை செய்யும் NGO அமைப்புகளுக்கு நீங்கள் உதவலாம். முதல் கட்டமாக அருணோதயா சேவை அமைப்புக்கு நாங்கள் உதவியிருக்கிறோம்.

90% கேள்விகள் இந்தியாவை பற்றியது தான். இதுவரை 4000 பேர் இந்த ஆப்பை டவுன்லோடு செய்திருக்கிறார்கள். ஒரு சில நண்பர்களின் பொருளாதார பங்களிப்புடன் இதை உருவாக்கியிருக்கிறோம். ஒரு சில இளைஞர்கள் என்னுடன் இணைந்து வேலை செய்து வருகிறார்கள். நிறைய ஆராய்ச்சி செய்திருக்கிறோம்” என்றார்.