முத்துராமலிங்கம் – சினிமா விமர்சனம்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமே நெப்போலியனின் பேச்சுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்து வருகிறது. நெப்போலியன்  சிறு வயதில் இருந்தே சிலம்பத்தின் முன் கத்தியை வைத்து ஆடுவதில் கைதேர்ந்தவர். இவருடைய மகனான நாயகன் கௌதம்  கார்த்திக்கும் சிலம்பம் கற்று கைதேர்ந்தவராக வலம் வருகிறார். நெப்போலியனுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். இதில் இளைய மகன்தான் கௌதம் கார்த்திக். ஒருநாள் கௌதம் கார்த்திக்  ரோட்டில் நடந்துபோய்க் கொண்டிருக்கும்போது நாயகி பிரியா ஆனந்தை பார்க்கிறார். பார்த்தவுடனேயே அவள்மீது இவருக்கு  ஈர்ப்பு வந்துவிடுகிறது. அடுத்தடுத்த சந்திப்புகளில் இருவரும் நெருக்கமாகி, காதலர்களாகிறார்கள். இவர்களது காதலுக்கு இரண்டுபேர் வீட்டிலும் சம்மதம் கிடைக்கிறது. ஆனால், நாயகிக்கு திருமணமாகாத ஒரு அக்கா,  அதேபோல் நாயகனுக்கு திருமணமாகாத ஒரு அண்ணன் இருப்பது இவர்களுடைய திருமணம் உடனே நடைபெற தடையாக  இருக்கிறது. எனவே, பெரியவர்கள் அனைவரும் நாயகியின் அக்காவுக்கும், நாயகனின் அண்ணனுக்கும் திருமணம் பேசி  முடிக்கின்றனர். இந்நிலையில், பக்கத்து ஊரில் சிலம்பம் போட்டி நடைபெறப்போவதாக அறிவிப்பு வருகிறது. அந்த போட்டிக்கு சென்றால் ஏதாவது  பிரச்சினை வரும் என்பதற்காக தன்னுடைய கிராமத்தில் இருந்து யாரும் அந்த சிலம்பம் போட்டியில் கலந்துகொள்ளக்கூடாது  என்று நெப்போலியன் கட்டளையிடுகிறார். ஆனால், கௌதமோ அவரது பேச்சை மீறி, தனது நண்பர்களுடன் அந்த ஊரில்  நடக்கும் சிலம்பம் போட்டிக்கு போக தயாராகிறார்.

கௌதம் கார்த்திக் தங்கள் ஊருக்கு சிலம்பம் ஆடவருவதை அறியும் பெப்சி விஜயன், கௌதம் வரும் வழியிலேயே ஆட்களை  வைத்து அவனை விரட்டிவிட நினைக்கிறார். அப்போது நடக்கும் சண்டையில் கௌதம் கார்த்திக் சிலபேரை தாக்கிவிடுகிறார்.  இதில் எதிர்தரப்பை சேர்ந்தவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேர்க்கப்படுகிறார்கள்.  இது போலீசுக்கு செல்ல, பயந்துபோன நெப்போலியன், கௌதம் கார்த்திக்கை தலைமறைவாக சொல்கிறார். கௌதம்  கார்த்திக்கும் தலைமறைவாகிறார். கௌதமை தேடி வரும் போலீஸ், அவர் தலைமறைவாக இருக்கிறார் என்பதை அறிந்ததும், நெப்போலியனை அவமானப்படுத்தி  போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்வதால் வெகுண்டெழும் கௌதம் கார்த்திக், தனது அப்பாவை  அவமானப்படுத்திய போலீசாரின் கையை வெட்டி விடுகிறார். இதன்பிறகு, இந்த பிரச்சினை பெரிய அளவில் செல்ல, இதை பற்றி  விசாரிப்பதற்காக போலீஸ் அதிகாரி வம்சி கிருஷ்ணா ஊருக்குள் வருகிறார். ஆனால், அதற்குள் அந்த ஊரில் உள்ள ஆண்கள் எல்லோரும் தலைமறைவாகிறார்கள். இறுதியில், கௌதம் கார்த்திக், நெப்போலியன் கொலை குற்றத்தில் இருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே படத்தின் மீதிக்கதை. 

படத்தில் முத்துராமலிங்கம் என்ற வீரத்திருமகனின் பெயருடன் வலம்வரும் கௌதம் கார்த்திக், அதற்குண்டான தோற்றத்தில்  அசர வைக்கிறார். ஆனால், இவருடைய நடிப்பில்தான் வீரம் எடுபடவில்லை. படத்தில் இவரது கதாபாத்திரம் மாஸாக  இருப்பதால், இவருடைய குழந்தை முகத்தில் மாஸ் நடிகருக்குடான நடிப்பை வெளிக்கொண்டு வரமுடியவில்லை. இருப்பினும்,  சண்டைக் காட்சிகள், ரொமான்ஸ் காட்சிகளில் புகுந்து விளையாடியிருக்கிறார். படத்திற்கு பெரிய பலம் நெப்போலியனின் தோற்றமும், அவருடைய வீரமான நடிப்பும்தான். திரையில் இவரை பார்த்தவுடனேயே  கண்டிப்பாக நம்மை ஏமாற்றமாட்டார் என்ற நம்பிக்கை நமக்குள் வந்துவிடுகிறது. பிரியா ஆனந்த் பள்ளி மாணவியாக கச்சிதமாக  வந்து போயிருக்கிறார். வழக்கமான கதாநாயகிபோல் இல்லாமல் இப்படத்தில் இவருக்கு நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய  வலுவான கதாபாத்திரம்தான். அதை அவர் சிறப்பாகவே செய்திருக்கிறார். விஜி சந்திரசேகர் வழக்கம்போல் வீரப்பெண்மணியாக  வந்து நம்மை கவர்கிறார். முதல்பாதியை கலகலப்பாக கொண்டு செல்ல சிங்கம் புலியின் காமெடி மிகப்பெரிய உதவி செய்திருக்கிறது. பிற்பாதியில்  காமெடிக்கு விவேக் வந்தாலும், அவருடைய ஒருசில காமெடிகள்தான் ரசிக்க தோன்றுகிறது. போலீஸ் அதிகாரியாக வரும் வம்சி  கிருஷ்ணா, மற்றொரு ஊர் தலைவராக வரும் பெப்சி விஜயன் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்தை சிறப்பாக  செய்திருக்கிறார்கள். இயக்குனர் ராஜதுரை ஒரு சமூகம் சார்ந்தவர்களின் வீரத்தை மையப்படுத்தி இந்த படத்தை எடுத்திருக்கிறார்.

படத்தில் உள்ள  கதாபாத்திரங்கள் அனைத்தும் வீரத்துடன் வெகுண்டெழுவதுபோல் வருவதால் கொஞ்சம் டல்லடிக்கிறது. வசனங்கள் படத்திற்கு  பலமாக இருந்தாலும், அதை ஒருசில கதாபாத்திரங்கள் பேசும் தொனி அந்த வசனத்தின் மீதுள்ள பலத்தை  சீர்குலைத்துவிடுகிறது.  இசைஞானி இளையராஜா இசையில் பாடல்களில் கிராமத்து மணம் தவழ்கிறது. பின்னணி இசையிலும் தான் ராஜா என்பதை  நிரூபித்திருக்கிறார். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவில் கிராமத்து அழகை அழகாக படம்பிடித்திருக்கிறார்.