முற்றிலும் ஒரு மாறுபட்ட பரிமாணத்தில் இருக்கும் படம் 100 – சாம் சிஎஸ்

தனது ஒவ்வொரு இசைத்தொகுப்பிலும் புதுமையான மற்றும் புதிய விஷயங்களை வைத்து நம்மை ஆச்சர்யப்படுத்தி, தனது திறமையை மற்றும் தனித்துவத்தை தொடர்ந்து நிரூபித்து வருகிறார் இசையமைப்பாளர் சாம் சிஎஸ். அவரது பாடல்கள் மற்றும் பின்னணி இசை என இரண்டுக்குமே ரசிகர்களிடம் இருந்து சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறார். குறிப்பாக, அதிரடியான பின்னணி இசையில் குறிப்பிடத்தகுந்த ஒரு இசையமைப்பாளராக மாறியுள்ளார். சமீபத்தில் அதர்வா முரளி, ஹன்சிகா மோத்வானி நடிப்பில் உருவாகியுள்ள “100” படத்தின் டிரைலரில் அவரின் இசைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இசையமைப்பாளர் சாம் சிஎஸ் கூறும்போது, “என் இசையை பற்றி பலர் சொல்லும் நல்ல கருத்துக்களை கேட்க எப்போதுமே நன்றாக இருக்கும், குறிப்பாக எனது பின்னணி இசையை பற்றி. ஆனால் உண்மையில், மிகச்சிறந்த இசையை வழங்கும் அளவுக்கு கதையில் முக்கியத்துவம் இருக்கும் படங்கள் எனக்கு அமைவது மகிழ்ச்சி அளிக்கிறது. “100” படத்தை பொறுத்தவரை, நான் ‘அடங்க மறு’ படத்துக்கு பிறகு ஒரு இசையமைக்கும் ஒரு போலீஸ் படம், ஆனால் முற்றிலும் ஒரு மாறுபட்ட பரிமாணத்தில் இருக்கும் படம். இயக்குனர் எனக்கு கதை சொல்லும் போதே, அந்த படத்தில் இசையில் புதுமையாக ஏதாவது முயற்சி செய்ய வாய்ப்பு இருக்குமா? என்பதை நான் எளிதாக கணித்து விடுவேன். ஆனால், சாம் ஆண்டன் கதை சொல்லும்போது என்னை அப்படியே கட்டிப் போட்டு விட்டார். அடுத்து என்ன அடுத்து என்ன என தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகமானது. இப்போது எங்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த குழுவும் முழு படத்தை பார்த்து திருப்தி அடைந்தது எனக்கு மிகப்பெரிய திருப்தியை கொடுக்கிறது” என்றார்.

“அடங்க மறு” என்ற மாபெரும் வெற்றி பெற்ற ஒரு போலீஸ் படத்தில் நான் முன்பே வேலை செய்திருந்தாலும், “100” அதன் கதை சொல்லலிலும், களத்திலும் முற்றிலும் வித்தியாசமாக இருப்பதாக நான் உணர்ந்திருக்கிறேன். இது ஒரு போலீஸ்காரனின் உடல் வலிமையை மட்டும் பெரிதாகக் காட்டும் ஒரு படம் அல்ல, அத்தோடு அவனது புத்திசாலித்தனமான செயல்களை  பற்றிய விஷயங்களும் உண்டு. அதன்படி, இசையில் அது புதுமையை கோரியது, ரசிகர்கள் பின்னணி இசையை ஏற்கனவே கேட்டது போல உணரக் கூடாது என்பதில் கவனமாக இருந்தோம். சாம் ஆண்டன் தொடர்ந்து ‘திரில்லர்’ படங்களை செய்ய நான் அவரை வலியுறுத்துகிறேன், அவர் அதை செய்வார் என நம்புகிறேன். இது அவருக்கு ஒரு முக்கிய அடையாளமாக இருக்கும்” என்றார்.

சாம் ஆண்டன் இயக்கியுள்ள “100” திரைப்படம், காவல்துறை கட்டுப்பாட்டு அறை பின்னணியில் நடக்கும் ஒரு கதை. சிக்கலான ஒரு பிரச்சினை நாயகன் முன்வர, அதில் அவர் எப்படி திறமையாக செயல்பட்டு, பாதிக்கப்பட்டவர்களை மீட்கிறார் என்பதை பற்றிய படம். ஆரா சினிமாஸ் சார்பில் காவியா வேணுகோபால் தயாரிக்க மற்றும் ஜிகுரு ஸ்ரீ மிஸ்ரி எண்டர்பிரைசஸில் சார்பில் சி பதம்சந்த் ஜெயின் மே 9ஆம் தேதி தமிழகம் முழுக்க வெளியிடுகிறார்.