தமிழ் இசைத்துறையில் திறமை வாய்ந்த இளம் இசையமைப்பாளர் கே.எஸ். சுந்தரமூர்த்தி அவரது அடுத்த வெளியீடான ‘ஐரா’ படம் குறித்து மிகவும் பாஸிட்டிவ்வாக உணர்கிறார். வெவ்வேறு வகையான பாடல்களை கொண்டிருந்த அவரது ஐரா ஆல்பம் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த மிகப்பெரிய வரவேற்பை கொண்டாடாமல், அவரது நெருங்கிய நண்பரும், இயக்குனருமான கேஎம் சர்ஜூனுக்கு நன்றியை தெரிவிக்கிறார்.
“என் மீது இந்த அளவு நம்பிக்கையை அவர் வைக்காமல் இருந்திருந்தால் இது சாத்தியம் இல்லை. லக்ஷ்மி மற்றும் மா போன்ற குறும்படங்களை எடுத்த நாட்களில் இருந்தே நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். எனக்கும் சர்ஜூனுக்கும் இடையே உள்ள பந்தம் விலை மதிப்பற்ற ஒரு பரிசு. அது தான் எங்களை கலையில் புதிய விஷயங்களை செய்ய உதவுகிறது. எப்போது, நாங்கள் கதையை பற்றி விவாதித்தாலும் நான் உடனடியாக சில இசைக் குறிப்புகளை வாசித்து காட்டுவேன். சம்பந்தப்பட்ட காட்சிகளை படம்பிடிக்கும் போது அது அவர் மனதில் ஓடும். எங்கள் நட்பின் ரகசியம் என்னவென்று பலரும் கேட்கிறார்கள்.
நிச்சயமாக, அது சர்ஜுன் எனக்கு வழங்கும் நம்பிக்கை மற்றும் சுதந்திரம் தான். அதுவே தனித்துவமாக சிந்திக்க எனக்கு உதவுகிறது. ஒவ்வொரு இசையமைப்பாளருக்கும் விருப்பமான இயக்குனர் ஒருவர் இருப்பார். அவருடன் பணிபுரியும் போது இசை மிகவும் சிறப்பாக அமையும். அது போன்ற அனுபவங்கள் ஒருவரின் திரை வாழ்வின் ஆரம்ப கட்டத்தில் நடப்பது என்பது மிகவும் ஆச்சர்யமான விஷயம். அந்த வகையில் என் இசை பயணத்தின் ஒரு பகுதியாக சர்ஜூன் எனக்கு கிடைத்ததை நான் வரமாக உணர்கிறேன்” என்றார்.
கே.எஸ். சுந்தரமூர்த்தி இயல்பிலேயே சினிமா மற்றும் கலை தாகம் உடையவர். அவரது தந்தை ஒரு டிசைனர். கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் ஆகியோருடன் பணியாற்றிய அவரது படைப்புகள் மிகவும் கவனிக்கப்பட்டன. தனது குழந்தை பருவத்தில் இருந்து இசை திறமைகளை ஒருங்கே பெற்ற இந்த இளம் இசையமைப்பாளர் கலை மற்றும் வணிக ரீதியான படங்களுக்கும் இசையமைக்க விரும்புகிறார்.
நயன்தாரா இரட்டை வேடங்களில் நடிக்க, கேஎம் சர்ஜூன் இயக்கியுள்ள இந்த ஐரா படத்தை கேஜேஆர் ஃபிலிம்ஸ் சார்பில் கோட்டபாடி ஜே ராஜேஷ் தயாரித்திருக்கிறார். மார்ச் 28 அன்று உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்தில் கலையரசன் மற்றும் யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.