திருமதிகளின் திறமைக்கு மேடை அமைத்துக் கொடுக்கும் வகையில் 18வது ஆண்டாக சுப்ரீம் லிவிங் திருமதி சென்னை 2018 போட்டி நடைபெற்றது.
நவம்பர் 3-ம் தேதி பங்கேற்பாளர்களின் தேர்வுக்குப் பிறகு 6 வாரங்கள் பல்வேறு சுற்றுகளாக போட்டி நடத்தப்பட்டது. திருமதி சென்னையின் பிரமாண்டமான இறுதிச் சுற்றுப் போட்டி சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலில் வெள்ளிக்கிழமை (14.12.2018) அரங்கேறியது. நிகழ்ச்சியில் இயக்குனர் லிங்குசாமி, நடிகை அதுல்யா உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர். பிரபல மாடலிங் நட்சத்திரங்கள் திருமதி சென்னை போட்டியில் பங்களித்தனர்.
பொது அறிவு, உடல்தகுதி, திறமைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 திருமதிகள் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றனர்.
இறுதிப் போட்டியில் பாரம்பரிய சேலைகள் அணிந்து முதல் சுற்று நடைபெற்றது. மேற்கத்திய உடை அணிந்து இரண்டாம் சுற்றில் திருமதிகள் அசத்தினர்.
திருமதி சென்னை போட்டி நடுவர்களாக நடிகை சாக்ஷி அகர்வால், டிவி தொகுப்பாளினி அஞ்சனா, நடிகை பிரியா ராமன், தாய்லாந்து வர்த்தக மையத்தின் இயக்குனர் ஜிட்டிமா நகமனோ, பாலம் சில்க்ஸ் நிறுவனர் ஜெயஸ்ரீ, பிரபல மாடல் சங்கீதா கோபால் ஆகியோர் போட்டியாளர்களை தேர்வு செய்தனர்.
போட்டியின் முடிவில் 2018-ன் திருமதி சென்னையாக பிரியங்கா தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு 5 லட்ச ரூபாய் மதிப்பிலான பரிசுப் பொருட்களோடு சிங்கப்பூரில் 4 நாள் தங்குவதற்கான டிக்கெட் வழங்கப்பட்டது.
இரண்டாவதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்த்தி ராம்குமாருக்கு 3 லட்சம் மதிப்பிலான பரிசுப் பொருட்கள், மலேசியாவில் 4 நாள் தங்குவதற்கான பயண டிக்கெட் வழங்கப்பட்டது.
மூன்றாவது பரிசை பெற்ற தீப்தி சந்தருக்கு 2 லட்ச ரூபாய் மதிப்பிலான பரிசுப் பொருட்களும் பேங்காக்கில் 4 நாள் தங்குவதற்கான பயண டிக்கெட்டை பரிசாக பெற்றார்.