நிறைய திறமையும், பொறுப்பும் தேவை டீஸரை உருவாக்க

நகைச்சுவை என்பது சிவகார்த்திகேயன் மற்றும் ராஜேஷ் ஆகிய இருவரிடம் இருந்தும் பிரிக்க முடியாத ஒரு அங்கம். அனைத்து தரப்பு, குடும்ப ரசிகர்களையும் அதன் மூலம் ரசிக்க வைக்கிறார்கள். அவர்கள் இருவரும் மிஸ்டர் லோக்கல் மூலம் ஒரே படத்தில் இணைகிறார்கள் என்ற முதல் அறிவிப்பு வந்ததில் இருந்து, அடுத்தடுத்த அறிவிப்பு மூலம் இன்று வரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. தற்போது அதன் டீஸர் வெளியாகி அனைவரையும் திரும்ப திரும்ப பார்க்க வைத்துக் கொண்டிருக்கிறது.
ஒரு டீஸரை உருவாக்குவது என்பது நிறைய திறமையும், பொறுப்பும் தேவை. ஏனெனில் படத்தில் என்ன இருக்கிறது என்பதை ரசிகர்களுக்கு சரியாக சொல்ல வேண்டும். இந்த மிஸ்டர் லோக்கல் டீஸரில் பிரதான கதாபாத்திரங்களான மனோகர் (சிவகார்த்திகேயன்) மற்றும் கீர்த்தனா (நயன்தாரா) ஆகியோரிடையே உள்ள மோதல்கள் மிகத்துல்லியமாக சித்தரிக்கப்பட்டுள்ளன. மேலும், சிவகார்த்திகேயனின் கதாபாத்திரத்தில் அவரது நகைச்சுவை உணர்வும், மாஸ் தருணங்களும் மிகச் சரியாக காட்டப்பட்டுள்ளன. கூடுதலாக, முன்னணி கதாபாத்திரங்களுக்கிடையே நாம் பார்க்கும் வாய்மொழி சண்டை, முழுப்படமும் எப்படி இருக்கும் என்பதை காண நம்மிடையே எதிர்பார்ப்புகளை உண்டாக்குகிறது. ஹிப் ஹாப் தமிழாவின் கவர்ந்திழுக்கும் பின்னணி இசையும் டீஸரில் கூடுதல் சிறப்பு.
மே 1ஆம் தேதி வெளியிட  திட்டமிடப்பட்டுள்ள மிஸ்டர் லோக்கல் படத்தை ராஜேஷ் இயக்கியிருக்கிறார், ஸ்டுடியோகிரீன் ஃபிலிம்ஸ் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்திருக்கிறார். ராதிகா சரத்குமார், தம்பி ராமையா, யோகிபாபு, சதீஷ் மற்றும் சில முக்கிய நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில், விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ரோகேஷ், மிர்ச்சி விஜய் மற்றும் கே.ஆர்.தரண் பாடல்களை எழுதியுள்ளனர். தினேஷ்குமார் நடனத்தையும், அன்பறிவு சண்டைப்பயிற்சியையும் கவனிக்கின்றனர்.