அனைத்து மக்களின் வங்கிக்கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவதாக மோடி கூறவில்லை எனத் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியுள்ளார். ஒவ்வொருவருடைய கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடும் அளவிற்கு வெளிநாட்டில் கருப்பு பணம் உள்ளது. அதை மீட்டு வருவோம் என்பதே மோடி கூறியது எனத் தெரிவித்தார். திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு எதிராகக் கருத்துக்களை கூறி வருகிறார். அவர் கூறும் போது, “இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கிலும் 15 லட்சம் போடுவதாக கூறினாரே? அது என்னாயிற்று?” எனக் கேட்டு வருகிறார்.
இதற்குத் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், ட்விட்டரில் பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, “வெளிநாட்டில் கறுப்பு பணம் ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் ரூபாய் போடும் அளவிற்குப் பதுக்கப்பட்டுள்ளது. அதனை மீட்டு வருவோம் என்றே கூறினார். இந்த உரையை திரித்துக்கூறி உங்கள் ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கில் 15 லட்சம் ரூபாய் போடுவதாக மோடி சொன்னாரே என 2ஜி ஊழல் விஞ்ஞானிகள்(ஸ்டாலின்) பொய்ப்பிரச்சாரம் செய்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.