மரபணுமாற்றம் செய்யப்பட்ட கடுகை தடைசெய்ய கோரி மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சருக்கு கடிதம்

PVP Bangalore Nattkal

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்த்தனுக்கு எழுதியுள்ள கடிதத்தில், மரபணுமாற்றம் செய்யப்பட்ட கடுகை வணிக ரீதியாக பயன்படுத்துவதற்கு சுற்றுச்சூழல், வனம், மற்றும் பருவநிலை மாற்ற துறையின் கீழ் இயங்கும் மரபணுபொறியயல் அங்கீகாரக் குழு கட்டுப்பாட்டு அனுமதி வழங்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்பதோடு, இந்த முடிவு நாட்டில் உள்ள விவசாயிகளையும், விவசாயக் கூலிகளையும், நுகர்வோரையும் மிகவும் மோசமாக பாதிக்கும் ஆபத்து மிகுந்ததாக அமைந்துள்ளது. இதன் அடிப்படையில் மரபணுமாற்றம் செய்யப்பட்ட கடுகுக்கு அனுமதி வழங்கும் முடிவு எதையும் சுற்றுச்சூழல், வனம், மற்றும் பருவநிலை மாற்ற துறை எடுக்க முயற்சிப்பது நாட்டு நலனுக்கு எவ்விதத்திலும் உகந்தது அல்ல என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான நாடுகள் மரபணுமாற்றம் செய்யப்பட்ட பயிர்களை தங்கள் நாட்டிற்குள் நுழைய விடுவதில்லை. மரபணுமாற்றம் செய்யப்பட்ட கடுகு விதையுடன் தெளிக்கப்படும் இரசாயணம் மனித குலத்திற்கு மிகவும் ஆபத்தானது என்பதால் இதை உலகில் உள்ள பெரும்பான்மையான நாடுகள் எதிர்க்கின்றன. மரபணுமாற்றம் செய்யப்பட்ட கடுகினால் நிறைய நன்மைகள் இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி, இந்த அனுமதிக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிருக்கிறார்கள் என்றாலும், இந்த மரபணமாற்றத்தால் எவ்வித நன்மைகளும் இல்லை என்பது பல ஆய்வுகள் மூலம் வெளிவந்துள்ளதை தங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் எந்தப் பகுதியிலும் இதுவரை மரபணுமாற்றப் பயிர்கள் தொடர்பான பரிசோதனைகள் ஏதும் நடைபெறவில்லை.

நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களும் இந்த மரபணுமாற்ற பயிர்களை எதிர்த்துள்ளதோடு மட்டுமின்றி, கேரள மாநில சட்டமன்றத்தில் மரபணுமாற்றம் செய்யப்பட்ட கடுகிற்கு எதிராக தீர்மானமே நிறைவேற்றியிருக்கிறது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஆகவே இது போன்ற மரபணுமாற்ற பயிர்கள் இயற்கையின் நலனுக்கும், மக்களின் ஆரோக்கியத்திற்கும் சற்றும் உகந்தது அல்ல என்பதால் மரபணுமாற்றம் செய்யப்பட்ட கடுகுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று மாண்புமிகு மத்திய அமைச்சர் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.