தன்னால் ஏற்பட்ட நஷ்டத்துக்கு தார்மீக பொறுப்பேற்ற அதர்வா

கோடிகளில் வியாபாரம் புழங்கும் திரைத்துறையில், எல்லோருக்குமே வெற்றி என்பது கிடைத்து விடுவதில்லை. படங்கள் தோல்வி அடையும்போது கோடிக்கணக்கில் ஏற்படுகின்ற நட்டம் தயாரிப்பாளர் மீது மட்டுமல்ல, சில சமயம் தயாரிப்பாளர் அல்லது படத்தில் நடித்த நடிகர் மீதோ நம்பிக்கை வைத்து படத்தை வெளியிடும் வெளியீட்டாளர்கள் தலை மீதும் ஏறும்.

நம் தமிழ் திரையுலகில் ஒருசில நடிகர்கள், இப்படிப்பட்ட சூழலில் தங்களது சம்பளத்தை விட்டுக்கொடுத்தோ, அல்லது அல்லது நஷ்ட ஈடாக ஒரு தொகையை திருப்பிக்கொடுத்தோ வெளியீட்டாளர்களின் நட்டத்தை சரிசெய்வதும் நடக்கிறது. ஆனால் அப்படி செய்பவர்கள் இங்கு வெகு சிலர் தான்.

குசேலன் படம் தோல்வியால் தனது குருநாதர் கே.பாலசந்தர் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது சம்பளத்தில் ஒரு பகுதியை, படம் வாங்கியவர்களுக்கு நஷ்ட ஈடாக திருப்பிக்கொடுத்த வரலாறு இன்றும் பேசப்படுகிறது.. இதுபோல இன்னும் ஒரு சிலரே இந்தப்பட்டியலில் உள்ளனர். அந்த பட்டியலில் நடிகர் அதர்வாவும் தற்போது இடம்பிடித்துள்ளார்.

ஆம் சில மாதங்களுக்கு முன் அதர்வா நடிப்பில் ‘செம போத ஆகாத’ படம் வெளியானது. தன்னை பாணா காத்தாடி படத்தில் அறிமுகப்படுத்திய இயக்குனர் பத்ரி வெங்கடேஷுக்கு கைகொடுக்கும் விதமாக, கிக்காஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து இந்தப்படத்தை தானே சொந்தமாக தயாரித்தார் அதர்வா .

ஒருகட்டத்தில் இந்தப்படம் ரிலீஸுக்கு தயாராவதில் பொருளாதார ரீதியாக சிரமத்தை சந்தித்தபோது, இந்தப்படத்தை நல்லபடியாக வெளியிடுவதற்கு தனது எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் மூலம் உதவிக்கரம் நீட்டினார் தயாரிப்பாளர் மதியழகன். ஆனால் இந்தப்படத்தின் ரிலீஸ் தேதியன்று தன் பக்கம் உள்ள சில பிரச்சனைகளை அதர்வா சரிசெய்து படத்தை மதியழகனுக்கு ஒப்படைப்பதற்குள், முதல் இரண்டு காட்சிகள் ரிலீஸ் செய்ய முடியாமல் போனது.

படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்த நிலையில் மினிமம் கியாரண்டி முறையில் இந்தப்படத்திற்கு விநியோகஸ்தர்களிடம் ஒப்பந்தம் போட்டிருந்தார் மதியழகன். ஆனால் காலை இரண்டு காட்சிகள் படம் ரிலீஸ் ஆகாததால், படத்தின் மீதான அந்த எதிர்பார்ப்பு மங்கி, விநியோகஸ்தர்களுக்கு இந்தப்படத்தை டிஸ்ட்ரிபியூஷன் முறையில் கொடுக்க வேண்டியதாகி விட்டது.

தவிர படமும் எதிர்பார்த்த வரவேற்பை பெற தவறியதால், படத்தை வெளியிட்ட வகையில் மதியழகனுக்கு சுமார் 5 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டது. இந்த விபரங்கள் அனைத்தும் அதர்வாவுக்கும் தெரியும்.

இந்தப்படத்தின் வெளியீட்டிற்கு முன்பாகவே தயாரிப்பாளர் மதியழகன், ஏ.ஆர்.கே.சரவணன் என்பவர் இயக்கத்தில் அதர்வாவை வைத்து ‘மின்னல் வீரன்’ என்கிற படத்தை தயாரிக்கும் வேலைகளில் இறங்கி கிட்டத்தட்ட படப்பிடிப்பிற்கு தயார் நிலையில் இருந்தார்.

இந்தநிலையில் தன்னுடைய ‘செம போத ஆகாத’ பட வெளியீட்டால், தயாரிப்பாளர் மதியழகனுக்கு நட்டம் ஏற்பட்டதால், இதற்கு தார்மீக பொறுப்பேற்ற அதர்வா, மின்னல் வீரன் படத்திற்காக சம்பளம் எதுவும் வாங்காமலேயே நடித்துக்கொடுக்க முன்வந்துள்ளார். மேலும் இந்தப்படத்தின் பணிகளை விரைவாக முடித்து ஆறு மாதங்களுக்குள் படத்தை வெளியிட உதவுவதாகவும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.

சமீபத்தில் அதர்வா நடித்த ‘இமைக்கா நொடிகள்’ படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்று, சமீபகாலமாக சரிந்திருந்த அதர்வாவின் மார்க்கெட் வேல்யூவை சீராக்கி இருக்கிறது. இந்த வருட இறுதிக்குள் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டு 2௦19ல் படத்தை வெளியிட இருக்கிறார்களாம். ஆக, மின்னல் வீரன் அதர்வாவுக்கும் தயாரிப்பாளர் மதியழகனுக்கும் நிச்சயமாக வெற்றிமுகம் காட்டுவான் என உறுதியாக நம்பலாம்.