இயற்கை எரிவாயு என்ற பெயரில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு கொடுத்துள்ள அனுமதியை ரத்து செய்யக் கோரி நெடுவாசல் மக்கள் கடும் போராட்டத்தில் 13 நாட்களாக ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தை தடுக்க பல்வேறு முயற்சிகள் அரசு தரப்பில் இருந்து செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த போராட்டத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், விவசாயி அமைப்பினர், திரையுலகினர், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள், சுற்றுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள் என பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். குறிப்பாக இந்தப் போராட்டத்தில் மாணவர்கள் களத்தில் குதித்துள்ளனர்.
நெடுவாசல் போராட்டம் தீவிரமானதையடுத்து சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் போராட்டக்காரர்களிடம் அதிகாரபூர்வமற்ற பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் பேச்சுவார்த்தையின் போது அமைச்சர் சொன்ன எதையும் கிராம மக்கள் காதில் போட்டுக் கொள்ளவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்தத் திட்டத்தை ரத்து செய்தால் மட்டுமே போராட்டம் நிறுத்தப்படும் என்று கறாராய் சொல்லிவிட்டார்களாம் மக்கள். இதனால் கடுப்பாகிப் போன அமைச்சர், இந்தப் போராட்டத்தை எப்படியாவது தடுக்க வேண்டும் என்ற முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். அதே போல, தற்போது நெடுவாசல் கிராமத்தில் நடக்கும் போராட்டத்தை சீர்குலைக்க அமைச்சர் விஜயபாஸ்கர் காவல் துறைக்கு ரகசியமாக அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எது எப்படி இருந்தாலும், யார் தடுத்தாலும் தங்களது போராட்டம் தொடரும் என்று உறுதியாய் போராட்டக் களத்தில் 13வது நாளாய் உள்ளனர் நெடுவாசல் மக்கள்.