மினி பஸ் பிரச்சினை கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் நீதிமன்ற உத்தரவின் படி ஆய்வு

கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் ரூ.5 கோடி செலவில் கட்டிமுடிக்கப்பட்டு, கடந்த மார்ச் மாதம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி மூலமாக திறந்து வைத்தார். பஸ் நிலையத்தின் கிழக்கு பகுதியில் இருந்து மினிபஸ்கள் இயக்கப்பட்டுவந்தன. இந்நிலையில் மினிபஸ்களை அனுமதிப்பதால் இடம் நெருக்கடி ஏற்படுவது மட்டுமின்றி, மினிபஸ் ஊழியர்கள் மற்றும் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு இடையே பிரச்சினை இருந்து வந்தது. இதற்கிடையில் அண்ணா பஸ் நிலையத்தின் முன் பகுதியில் இருந்து மினிபஸ்களை இயக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மினிபஸ் உரிமையாளர்கள் பஸ்களை இயக்கமால் போராட்டத்தில் ஈடுபட்டது மட்டுமின்றி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து, நகராட்சி ஆணையர் உத்தரவிற்கு இடைக்கால தடை வாங்கினர். தற்போது மினிபஸ்கள் அண்ணா பஸ் நிலையத்திற்குள் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் படி நியமனம் செய்ப்பட்ட வழக்கறிஞர் அஜய் ஜஸ்டிஸ் ஷா இன்று அண்ணா பஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். பஸ் நிலையத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று ஆய்வு செய்தார். பஸ் நிலையத்தில் பஸ்கள் நிற்பதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதி, பயணிகளுக்காக செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஆய்வு மேற்க்கொண்டார்.

இந்த ஆய்வின் முடிவுகளை வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிறகு நீதிமன்றம் மினிபஸ்கள் பஸ் நிலையத்திற்குள் இருந்து இயக்குவது, இல்லையா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. ஆய்வின் போது தாசில்தார் ஜான்சன்தேவசகாயம், நகராட்சி ஆணையர் அச்சையா, வட்டாரபோக்குவரத்து அலுவலர் மன்னர்மன்னன்,மோட்டார் வாகன ஆய்வாளர் அமர்நாத், அரசுபோக்குவரத்து கழக உதவி செயற்பொறியாளர் சரவணன், நகராட்சி இணை செயற்பொறியாளர் லெட்சுமி, தாலூகா தலைமை சர்வேயர் செல்வராஜ் மற்றும் மினிபஸ் உரிமையாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.