‘யு’ சான்றிதழை பெற்ற மிக மிக அவசரம்

விஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள 3-வது படம் ‘மிகமிக அவசரம்’. அதுமட்டுமல்ல இந்த படத்தின் மூலம் முதல்முறையாக இயக்குனர் ஆகி இருக்கிறார் சுரேஷ்காமாட்சி.. நாயகியாக ஸ்ரீப்ரியங்கா நடித்துள்ளார். அரீஷ்குமார் கதாநாயகனாகவும், இயக்குநர் சீமான் காவல்துறை உயரதிகாரியாகவும் நடித்துள்ளனர்.

முத்துராமன், இயக்குநர் ஈ ராமதாஸ், அரவிந்த், லிங்கா, சாரதி, இயக்குநர் சரவண சக்தி, வெற்றிக்குமரன், வி கே சுந்தர், குணசீலன், மாஸ்டர் சாமுண்டி உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

இன்று சமூகத்தில் பெரும்பாலும் பெண்கள் வேலைக்கு செல்ல ஆரம்பித்துவிட்டனர். இப்படி சூழல் மாறினாலும், வேலைக்கு செல்லும் பெண்களின் அவல நிலை மட்டும் மாறவே இல்லை. ஆம். ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு விதமான பிரச்னைகளை அவர்கள் எதிர்கொள்ளவேண்டி இருக்கிறது.

அந்தவகையில் ‘மிக மிக அவசரம்’ படத்தில் காவல்துறையில் சாதாரண பொறுப்பில் பணியாற்றும் ஒரு இளம் பெண் போலீஸ், அந்த துறையில் சந்திக்கும் மிக நுட்பமான பிரச்சனைகளை இந்தப்படத்தில் விரிவாகவும் பட்டவர்த்தனமாகவும் அலசியிருக்கிறார் இயக்குனர் சுரேஷ் காமாட்சி.

இந்தப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்று சென்சார் அதிகாரிகளுக்கு இந்தப்படம் திரையிடப்பட்டது.

படத்தை பார்த்த அதிகாரிகள் படத்தில் எந்தவித திருத்தங்களும் சொல்லாமல் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கும் விதமாக ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர்.. மேலும் இந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள ஸ்ரீபிரியங்காவின் அற்புதமான நடிப்பிற்கு தங்களது தனிப்பட்ட பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர். படம் விரைவில் வெளியாக இருக்கிறது.