மெட்ரோ ரெயில் கட்டணம், நேரு பூங்கா- விமான நிலையத்துக்கு வாடகை காரை விட குறைவு

பொது மக்களின் விரைவு சேவைக்காகவும், போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் தொடங்கப்பட்டது. ரூ.14,500 கோடி மதிப்பீட்டில் இப்பணிகள் நடந்து வருகிறது. முதல் கட்டமாக கோயம்பேடு முதல் ஆலந்தூர் விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையில் மெட்ரோ ரெயில் போக்குவரத்து பொது மக்களுக்காக திறக்கப்பட்டது. திருமங்கலம் –  நேருபூங்கா வரை 7.5 கி.மீட்டர் தூரம் சுரங்க பாதையில் மெட்ரோ ரெயில் பணிகள் மும்முரமாக நடந்து முடிந்து உள்ளன.

திருமங்கலம், அண்ணா நகர் டவர், அண்ணாநகர் கிழக்கு, செனாய் நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா ஆகிய இடங்களில் 7 ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பயணிகள் ரெயில் நிலையங்களுக்கு செல்லவும், வெளியே வருவதற்காகவும் எஸ்கலேட்டர், லிப்ட் வசதிகள், படிக்கட்டு வசதிகள் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ளன. சுரங்க ரெயில் நிலையத்திற்குள் செல்லும் பயணிகளுக்காக நவீன குளிர்சாதன வசதிகள், காற்றோட்ட வசதிகள், இரவை பகலாக்கும் மின் விளக்கு வசதிகள், குடிநீர், கழிப்பிட வசதிகள் என அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

சுரங்க பாதையில் உள்ள ரெயில் நிலையங்கள் அனைத்தும் விமான நிலையத்துக்குள் செல்வது போன்ற தோற்றத்துடன் காணப்படுகிறது. பூமிக்குள் 60 அடி ஆழத்தில் இருக்கும் இந்த ரெயில் நிலையங்கள் அனைத்தும் பாதாள உலகத்தில் ஒரு சொர்க்க லோகம் போல தோற்றம் அளிக்கிறது. தரையில் இருப்பது போன்று அனைத்து வசதிகளும் பூமிக்கு கீழே கான்கிரீட் கட்டிடங்களாக ஜொலிக்கின்றன.

பூமிக்கு கீழே முதல்- தளத்தில் நுழைவு பகுதியில் டிக்கெட் கவுண்டர்கள், பாதுகாப்பு சோதனை செக்கிங் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. டிக்கெட் எடுத்ததும் உள்ளே சென்று ஆட்டோ மெட்டிக் மெஷினில் டிக்கெட் டோக்கனை காண்பித்ததும் கதவு தானாக திறக்கும். அதன் பின்னர் தான் 2-வது தளத்தில் ரெயிலில் பயணம் செய்வதற்கான நுழைவு பகுதிக்கு செல்ல முடியும். மெட்ரோ சுரங்க ரெயில் பயணம் பொதுமக்களுக்கு கான்கிரீட் குகைக்குள் செல்லும் திகில் அனுபவமாக இருக்கும்.

நேருபூங்கா-விமானம் நிலையம் வரை 23 கி.மீட்டர் தூரம் வரையிலான ரெயில் டிக்கெட் கட்டணம் ரூ.60 முதல் ரூ.70 வரை நிர்ணயிக்கப்பட உள்ளது. இக்கட்டணம் தனியார் கேப்ஸ் கார்களை விட 4 முதல் 5 மடங்கு குறைவானதாக இருக்கும். எடுத்துக்காட்டாக,  ஓலா, ஒபர் கார்களில் நேரு பூங்கா முதல் விமான நிலையத்துக்கு ரூ.263 முதல் ரூ.362 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பயணத்தூரம், போக்குவரத்து நெரிசல் காரணமாக விமான நிலையத்திற்கு கார்களில் செல்ல 1½ மணி நேரம் ஆகும். ஆனால் மெட்ரோ ரெயிலில் 1 மணி நேரத்தில் சென்று விடலாம்.

மெட்ரோ ரெயில் பயணத்துக்கு பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி, வரவேற்பு தெரிவித்துள்ளனர். கட்டணம் குறைவு,  பயண நேரம் குறைவு,  ‘திகில்’ அனுபவம் போன்ற காரணங்களால் பொதுமக்கள், பயணிகள் திறப்பு விழாவை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.