”மார்கழியில் மக்களிசை 2020” நிகழ்ச்சியின் 2-ஆம் நாளான நேற்று(25/12/2020), சிறப்பு விருந்தினாராக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் கலந்து கொண்டு இசை கலைஞர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார்.
கடந்த 2018 ஆம் ஆண்டின் இறுதியில், புத்தாண்டை சமத்துவ புத்தாண்டாக கொண்டாட வானம் கலைவிழா எனும் நிகழ்ச்சியை இயக்குனர் பா. இரஞ்சித் ஒருங்கிணைத்தார். இந்த நிகழ்ச்சி பல்வேறு தரப்பினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் நீட்சியாக தற்போது 2020 ஆம் ஆண்டின் இறுதியில் 2021-ஆம் ஆண்டின் புத்தாண்டை கொண்டாடும் விதமாக நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ”மார்கழியில் மக்களிசை 2020” எனும் நிகழ்ச்சி சென்னை தி.நகரில் உள்ள வாணி மஹாலில் நேற்று முன்தினம் தொடங்கியது தொடங்கியது. தொடர்ந்து 8 நாட்கள் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியின் 2-ஆம் நாளான நேற்று(25/12/2020) பாடகர்கள் தலித் சுப்பையா, ரோஜா ஆதித்யா, காஞ்சி பா.ராஜேஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டு பல்வேறு சமூக சமூகப்பிரச்சனை பற்றிய பாடல்களை பாடினர். திண்டுக்கல் பறை இசை குழுவினரின் பறை இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் கலந்து கொண்டு இசை கலைஞர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார். முன்னதாக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் பேசியதாவது, “ நாட்டுப்புற இசைக்கலைஞர்களை ஒருங்கிணைத்து மார்கழியில் மக்களிசை எனும் நிகழ்ச்சியின் மூலம் அந்த கலைஞர்களுக்கு இந்த மேடையை ஏற்படுத்திக் கொடுத்த நீலம் பண்பாட்டு மையம் மற்றும் இயக்குனர் பா.இரஞ்சித்திக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் கல்வி, பொருளாதாரம், அடிப்படை உரிமைகள், புகழ் என அனைத்தும் இந்தியாவிலுள்ள அனைத்து மக்களுக்கு சென்று சேரவேண்டும் என்று கூறினார். அந்த கூற்றை மெய்ப்பிக்கும் விதமாக இயக்குனர் பா. இரஞ்சித் தனது கலை மூலமாக செய்துக்கொண்டிருக்கிறார். பாபாசாகேப் அம்பேத்கர் கூறியதில் மிக முக்கியமானது கற்பி, ஒன்றுசேர், புரட்சி செய் என்ற கூற்றுகள் தான். ஒரு மனிதனுக்கு அரசியல் நியதி குறித்து கற்பித்தாலே அவன் கிளர்ந்தெழுவான். அந்த கற்பிக்கும் வேலையை தான் நீலம் பண்பாட்டு மையம் தொடர்ந்து செய்து வருகிறது, அவர்களுக்கு எனது வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.