இளையோர் திறன் மேம்பாட்டுக்கான மாரத்தான் போட்டி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏழை, எளிய இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள்  பயன்பெறும்  வகையில் பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான மாபெரும் மாரத்தான் சென்னையில் நடைபெற்றது. காஞ்சிபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள உடல் ஆரோக்கியம் மற்றும் செல்போன் பழுது நீக்கும் பயிற்சி மையம் மூலமாக RCC அறக்கட்டளை ஏழை, எளிய இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு பயிற்சி அளித்து வேலை வாய்ப்பும் ஏற்படுத்தி கொடுக்க உள்ளது. பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ள இந்த பயிற்சியில் முதல்கட்டமாக 500 பேர் பயனடைய இருக்கிறார்கள்.

500 இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றுவதற்கான மாரத்தான் போட்டியில்  5000 பேர் பங்கேற்று ஓடினர். பெசன்ட் நகர் ஆல்காட் பள்ளியில் இருந்து துவங்கிய மாரத்தான் போட்டிக்காக திட்ட இயக்குனர் மிதேஷ் பண்டாரி, தலைவர் மகேந்திர சங்வி ஆகியோர் முக்கிய பங்காற்றினர். பிக் லாண்டரி திரு குமரகுரு, ஜெயின் பஜார் திரு நீலேஷ் லோதா இருவரும் மாரத்தான் போட்டிக்காக பங்களிப்பு செய்திருக்கிறார்கள். 21 கிலோ மீட்டர், 10 கிலோமீட்டர், 5 கிலோ மீட்டர் மற்றும் 1.5 கிலோ மீட்டர் தூரம்  என்று 4 பிரிவுகளாக மாரத்தான் போட்டி நடைபெற்றது. 1.5 கிலோ மீட்டர் தூரத்திலான போட்டியில் 1000 குழந்தைகள் பெற்றோர்களோடு பங்கேற்று ஓடினர். 

இந்த போட்டியில் ரயில்வே பாதுகாப்புப்  படை ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு பங்கேற்று போலீசாருடன் இணைந்து ஓடினார். சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. மகேஷ் அகர்வால் 10 கிலோ மீட்டர் ஓட்டத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். எத்திராஜ் மகளிர் கல்லூரியில் இருந்து பங்கேற்ற 1000 மாணவிகளின் ஓட்டத்தை அந்த கல்லுரித் தலைவர் வி.எம்.முரளிதரன் துவக்கி வைத்தார்.

மாரத்தான் போட்டியை ஒட்டி சென்னை பெசன்ட் நகர் தொடங்கி போட்டி நடைபெறும் சாலைகள் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.

பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஏழை, எளிய இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள்  பயன்பெற உதவ  முன்வருவோர்www.magnathon.com என்ற வலைத்தளத்துக்கு சென்று பங்களிப்புச் செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு rccmagnum@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.