மெகா ஸ்கூல் ரீ-யூனியன் – வித்தியாசமாக நடைபெற்ற ‘மறக்குமா நெஞ்சம்’ இசை வெளியீட்டு விழா

மறக்குமா நெஞ்சம் திரைப்படம் பள்ளி கால நினைவுகளை ஏற்படுத்தி, மனதை வருடும் கதைக்களம் கொண்டு படமாக்கப்பட்டு இருக்கிறது. இரா. கோ. யோகேந்திரன் இயக்கியிருக்கும் மறக்குமா நெஞ்சம் படத்தில் ரக்‌ஷன் நாயகனாக நடித்திருக்கிறார். மேலும் இவருடன் மலினா, தீனா மற்றும் பிராங்ஸ்டர் ராகுல் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு கோபி துரைசாமி, இசை சச்சின் வாரியர், படத்தொகுப்பு சஷாந்த் மளி, கலை பிரேம் கருத்தமலை, பாடல்களை தாமரை எழுதியிருக்கிறார். இப்படத்தை ஜனார்தன் சவுத்ரி, ரமேஷ் பஞ்சக்னுலா, ரகு எல்லுரு மற்றும் இரா.கோ. யேகேந்திரன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா – இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் வித்தியாசமான முறையில் நடைபெற்றுள்ளது.

மறக்குமா நெஞ்சம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படத்தின் நடிகர், நடிகை, தொழில்நுட்ப கலைஞர்களுடன் அவர்களுடன் படித்த சகமாணவர்கள் கலந்து கொண்டனர். இப்படத்தில் பணியாற்றியவர்களின் நண்பர்கள் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் மேடை ஏறி, பாடலை வெளியிட்டனர்.

மறக்குமா நெஞ்சம் படத்தின் இயக்குனர், நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பள்ளி ஆசிரியர்களை மேடையில் ஏற்றி, முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சிறப்பு விருது வழங்கி சிறப்பித்தனர். இந்த விருது நன்றிக் கடன் விருது என அழைக்கப்படுகிறது. நன்றிக் கடன் விருந்து என்று அறிவித்து, ‘விதைத்துக் கொண்டே இருங்கள், முளைத்துக் கொண்டே இருக்கிறோம் – நன்றி’ என்று எழுதப்பட்டு இருந்தது.

விருதை பெற்றுக் கொண்ட ஆசிரியர்கள், மேடையிலேயே கண்கலங்கி, ஆனந்த கண்ணீர் சிந்தி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த சம்பவம் விழாவில் கலந்து கொண்டவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. பாடல்களை பள்ளி ஆசிரியர்கள் வெளியிட, அதனை திரைப்படத்தில் பணியாற்றிய கலைஞர்களின் பள்ளி கால நண்பர்கள் பெற்றுக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரின் பள்ளி கால நினைவுகளால் நிரம்பி வழிந்தது. நிகழ்ச்சியில் பேசிய ஆசிரியர்கள், தங்களது மாணவர்கள் பள்ளி நாட்களில் செய்த குறும்பு செயல்களை பகிர்ந்து, பள்ளி காலத்தில் கண்டிப்புடன் நடந்து கொண்ட பிறகும், நீண்ட காலம் கழித்து தங்களை அழைத்து விருது வழங்கி சிறப்பித்தது பற்றி தங்களின் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.

இதோடு ஆசிரியர்கள் எப்போதும் தங்களின் மாணவர்கள் சமூகத்தில் நல்ல நிலைக்கு வருவதை எண்ணி மகிழ்ச்சி அடைவர். ஆனால் சமூகத்தில் நல்ல நிலைக்கு வந்த பிறகு, பள்ளி ஆசிரியர்களை மறக்காமல், அவர்களை அழைத்து, மேடை ஏற்றி அவர்களை அங்கீகரித்தது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது என்று ஆசிரியை ஒருவர் தெரிவித்தார். ஆசிரியர்களின் பேச்சை கேட்டு, நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் ஆனந்த கண்ணீர் சிந்தினர்.

தமிழ் சினிமா மட்டுமின்றி, இதுபோன்ற நிகழ்ச்சியை இதுவரை கண்டதில்லை என கூறி இதற்கு ஏற்பாடு செய்த படக்குழுவுக்கு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் நன்றி தெரிவித்தனர்.