சந்தீப் கிஷன், ஸ்ரீ, சார்லி, ராம்தாஸ்… இவர்களை சுற்றி நடக்கும் கதைதான் மாநகரம். சந்தீப் கிஷன் கல்லூரிப் படிப்பு முடித்துவிட்டு, எந்த வேலைக்கும் போகாமல் நாயகி ரெஜினாவையே பின்தொடர்ந்து வருகிறார். ஐடி கம்பெனியில் பெரிய பதவியில் இருக்கும் ரெஜினாவுக்கு, சந்தீப் மீது பிரியம் இருந்தும் அதை வெளிக்காட்டாமல் இருக்கிறார். சந்திப் கிஷன் ‘சத்யா’ படத்தில் கமல் கதாபாத்திரத்தை போன்று மிகவும் துணிச்சலானவர். எந்த விஷயத்தையும் செய்யவேண்டும் என்று நினைத்தால் அதை தில்லாக செய்யக்கூடியவர். இவர்களுடைய கதை இப்படியாக பயணித்துக் கொண்டிருக்கையில், ரொம்பவும் நேர்மையான ஸ்ரீ, திருச்சியிலிருந்து சென்னைக்கு வேலை தேடி வருகிறார். ரெஜினாவின் கம்பெனிக்கு இன்டர்வியூவுக்கு செல்லும் அவருக்கு அங்கேயே வேலையும் கிடைத்து விடுகிறது. வேலை கிடைத்த சந்தோஷத்தில் ஸ்ரீ, நண்பர்களுக்கு பார்ட்டி கொடுக்கிறார். பார்ட்டி முடிந்து வெளிவரும்போது, ரவுடிகளிடம் ஏற்பட்ட கைகலப்பில், ஸ்ரீ தன்னுடைய ஒரிஜினல் சர்டிபிகேட் எல்லாவற்றையும் இழக்கிறார். இதை கண்டுபிடித்து திரும்பி அந்த வேலைக்கு சேர்வதா? அல்லது வெறும் கையுடன் ஊருக்கு திரும்புவதா? என்ற குழப்பத்தோடு சென்னையிலேயே சுற்றி வருகிறார்.
இன்னொரு பக்கம், சார்லி தனது 8 வயது பையனுக்கு உடல்நிலை சரியில்லாததால் சென்னைக்கு அழைத்து வந்து சிகிச்சை பார்க்கிறார். சென்னையிலேயே பெரிய தாதாவாக இருக்கும் மதுசூதனனிடம் வாடகைக்கு கார் எடுத்து ஓட்டி பிழைப்பை நடத்தி வருகிறார். அதிலேயே தனது மகனின் வைத்திய செலவையும் ஈடுகட்டும் முயற்சியில் இருக்கிறார். மற்றொரு பக்கம் ரொம்பவும் அப்பாவியான ராம்தாஸ், பணம் சம்பாதிப்பதற்காக ரவுடி கும்பலிடம் சேர்கிறார். அவர் மிகவும் திறமைசாலி என்று ஒருவரின் அறிமுகத்தோடு ரவுடிகளிடம் வேலைக்கு சேர்கிறார். இவரை வைத்து ஒரு பள்ளியில் படிக்கக்கூடிய குழந்தையை கடத்திவர சொல்கிறார்கள். இவர் கடத்தி வரச்செல்லும் பையனின் பெயரில் நிறைய பேர் அந்த பள்ளியில் இருப்பதால், இவர் கடத்திவரும் பையனுக்கு பதிலாக மதுசூதனன் பையனை கடத்தி வந்துவிடுகிறார். இந்த பையனை கடத்திய சம்பவத்தில் சந்தீப் கிஷன், ஸ்ரீ, சார்லி, ராம்தாஸ் என நான்கு பேருமே பாதிக்கப்படுகிறார்கள். இதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு வருகிறார்கள்? என்பதுதான் படத்தின் கதை.
நாயகன் சந்தீப் கிஷனுக்கு ரொம்பவும் துணிச்சலான கதாபாத்திரம். தோற்றத்தாலேயே அனைவரையும் ரசிக்க வைக்கிறார். ஆக்ஷன், காதல் காட்சிகளிலும் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு சிறப்பாக நடித்திருக்கிறார்.
இதுவரை வித்தியாசமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஸ்ரீக்கு இப்படமும் வித்தியாசமான கதைக்களம்தான். ஐ.டி. பையனாக அழகாக அனைவரையும் கவர்ந்திருக்கிறார். காட்சிக்கு காட்சி விறுவிறுப்புடன் நகரும் கதையின் ஊடே, வரும் ராமதாஸின் காமெடி படத்தின் சுவாரஸ்யத்திற்கு எந்த இடையூறும் இல்லாமல் இருப்பது சிறப்பு. இவர் வரும் காட்சிகள் எல்லாம் ரசிகர்கள் கலகலப்பாகிவிடுகிறார்கள். ஐடி கம்பெனியில் பணிபுரிபவராக வரும ரெஜினா, தனது நடிப்பை எதார்த்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார். சார்லியும் தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி படத்தின் கதையோட்டத்துக்கு பெரிதும் உதவியிருக்கிறார்.
முழுக்க முழுக்க திரையரங்கில் அமர்ந்து ரசிக்கக்கூடிய படமாக இதை கொடுத்திருக்கிறார்கள். அடுத்து என்ன நடக்கும், என்று யூகிக்க முடியாத அளவுக்கு காட்சிகளை அமைத்து, அழகான திரைக்கதையில் அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இரண்டே நாட்கள் நடக்கிற கதைதான். படத்தில் காதல், செண்டிமெண்ட், நகைச்சுவை, ஆக்ஷன் என எல்லாவற்றையும் சமமாக வைத்து, சமார்த்தியமாக கையாண்டு கைதட்டல் பெறுகிறார். குறிப்பாக, ராம்தாஸ் கதாபாத்திரத்தை விறுவிறுப்பிற்கு நடுவிலும், நகைச்சுவையுடன் கொண்டு போயிருப்பது படத்திற்கு பலம் கொடுத்திருக்கிறது. முதல் படத்திலேயே தனது அழகான திரைக்கதையால் ரசிகர்களிடம் பாராட்டு பெறுகிறார்.