மம்தா பானர்ஜி அதிரடி

இந்திய சுதந்திர போராட்டத்தின் போது நடைபெற்ற மிக முக்கிய போராட்டங்களில் ஒன்று வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்டம். இந்த போராட்டத்தின் 75-வது ஆண்டு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.  இதற்காக மேற்கு வங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, பாஜகவின் ஆட்சிக்கு முடிவு கட்ட, பாஜக-வே வெளியேறு எனும் இயக்கத்தை இன்று துவங்கி வைப்பதாக அறிவித்தார். அவரின் இந்த அறிவிப்பு மிகுந்த அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி உள்ளது.  அப்போது பேசிய அவர், மத்திய பாஜக அரசால் மக்களின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. மதச்சார்பின்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. நாட்டை பிளவுப்படுத்தும் பாஜகவின் முயற்சியை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். வரும் 2019 நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜகவே வெளியேறு எனும் வாசகம் பிரச்சார வாசகமாக இருக்கும். எதிர்கட்சிகளுடன் ஆலோசித்து இதற்கான திட்டத்தை உருவாக்குவோம். மதவாத, வெறுப்புணர்வை துாண்டும் பாஜகவின் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.  பாஜகவை அரசில் இருந்து தூக்கி எரிய வேண்டும். அதுவரை ஓயமாட்டோம். இறுதியில் ஜனநாயகமே வெல்லும். லாலு பிரசாத் யாதவ் நடத்தும் பேரணியில் கலந்து கொள்ள உள்ளேன். டார்ஜலிங் உள்ளிட்ட பகுதிகளை பிரித்து மேற்கு வங்கத்தை இரண்டாக பிரிக்க பாஜக முயற்சி செய்கிறது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் உடந்தை.  அவர்கள் இரட்டை வேடம் போடுகின்றனர். இந்த விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் பாஜக ஆகிய இரண்டும் ஒன்று தான் என்றார்.