தமிழர் வரலாற்றில் நாட்டு மாடுகளை ஆரோக்கியமாக வைத்து கொள்ளும் நோக்கில் கி.மு. 2000-ஆம் ஆண்டிலிருந்தே தமிழர்களால் நடத்தப்பட்டு வரும் வீரவிளையாட்டாக ஏறுதழுவல் (ஜல்லிக்கட்டு) இருக்கிறது. காலப்போக்கில் ஏறுதழுவல் என்ற பெயர் ஜல்லிக்கட்டு என பரவலாக அழைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு விளையாட்டு என்பதையும் தாண்டி காளைகள் ஆரோக்கியமாக வாழவும், பசுக்களை ஆரோக்கியமாக ஈன்றெடுக்கவும் உதவுகிறது. அறிவியல் பூர்வமாக நாட்டு பசுக்களை ஆரோக்கியமாக வாழ, காளை மாடுகள் ஆரோக்கியமாக இருப்பது அவசியம் ஆகும். இதற்கு காளைகள் ஜல்லிக்கட்டில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்பதை கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலகட்டத்தில் வாழ்ந்த நமது முன்னோர்கள் சரியாக கண்டறிந்து, இவ்வழக்கத்தை தொன்றுதொட்டு பின்பற்றி வந்துள்ளனர். இந்நிலையில், ஜல்லிக்கட்டு விளையாட்டில் காளைகள் துன்புறுத்தப்படுகிறது என எழுப்பப்பட்ட பிரச்சனை தமிழகத்தில் சில ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு விளையாட்டில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தி இருப்பதோடு ஜல்லிக்கட்டு நடத்த நிர்பந்தமாக தடையும் விதிக்கப்பட்டுள்ளது. உண்மையில், ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தடை விதிக்கப்படதற்கான பின்னணி காரணம் தான் என்ன? ஜல்லிக்கட்டில் ஈடுபடுத்தப்படும் காளை வகைகள், நமது வளர்ப்பு பிராணிகளான நாட்டுப் பசுக்களை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவுகிறது. இந்த வகையில் நாட்டுப் பசுக்கள் கொடுக்கும் பால் நமது உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும் என்பதோடு நோய் தடுப்பு மற்றும் நம் உடலுக்கு தேவையான சத்துக்களையும் வழங்குகிறது. இந்நிலையில், காளைகளை தழுவும் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு விதிக்கப்படும் தடையானது, தமிழ் மக்களின் பாரம்பரியம் என்பதையும் கடந்து, நம் மக்களின் வீரத்தையும் மழுங்கடிக்க செய்கிறதா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஏறுதழுவுதல், அதாவது காளைகளை அணைத்துப் பிடித்தல் என்ற இந்தப் போட்டியின் நேரடி பொருளை காயப்படுத்துதல் என நாம் தவறாக புரிந்துகொள்ள கூடாது. ஆனால், இதை சரியாக புரிந்துகொள்ளாத பிராணிகள் வதை தடுப்பு சங்கத்தினர் இந்த விளையாட்டில் காளைகளுக்கு காயம் ஏற்படுகிறது, அடிபட்டு ரத்தம் வடிகிறது என்றெல்லாம் குற்றம்சாட்டி வருகிறார்கள். ஜல்லிக்கட்டு விளையாட்டில் காளை வெற்றி பெற்றதா? அல்லது, அதனுடன் மோதியவர் வெற்றி பெற்றாரா? என்ற பேச்சுக்கே இடமில்லை. காளையின் திமிலைத் தழுவிப்பிடித்தபடி நீங்கள் எவ்வளவு நேரம் தரையில் உருண்டு தாக்குப் பிடிக்கிறீர்கள்? என்பதுதான் இந்த விளையாட்டின் முக்கிய அம்சம். தமிழகத்தில் இருக்கும் நாட்டு மாடு இனத்தையே முழுமையாக அழிக்க காளைகளை பலவீனப்படுத்தி, வெளிநாட்டு மாடுகளை இந்தியாவில் இறக்குமதி செய்து, அவற்றை கொண்டு லாபம் ஈட்டவே வெளிநாட்டு நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன. இவ்வாறு செய்வதால் வெளிநாடுகளில் செயற்கை முறையில் கருத்தரிக்கும் ஜெர்சி போன்ற கலப்பின மாடுகள் வழங்கும் பால், நம் உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என தகவல் வெளியாகியுள்ளது. காலப்போக்கில் தமிழர்கள் உள்பட இந்த பால் வகைகளை பயன்படுத்துவோரின் உடலில் உணர்ச்சி ரீதியிலான பிரச்சனைகள் ஏற்படத் துவங்கும். சமீபத்தில் நாட்டு காளை அழியும் தருவாயில் உள்ளது என்றும், இதனால் ஏற்படும் பாதிப்புகளையும் விளக்கும் பாடல் வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஜல்லிக்கட்டு தடைக்கு பின்னால் இருக்கும் அபாயம் குறித்து விழிப்புணர்வூட்டும் இந்தப் பாடல் வெளியானதை தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான பல்வேறுகட்டப் போராட்டங்கள் துவங்கப்பட்டன. தமிழர்களின் தலைமை திருநாளான தைப்பொங்கல் பண்டிகை நெருங்கிவரும் வேளையில் கடந்த சில வாரங்களாக ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி தமிழகம் முழுக்க மாணவர்கள், இளைய சமுதாயத்தினர் என அனைத்து தரப்பு மக்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுக்க வலுப்பெற்று வரும் போராட்டங்கள் வெற்றி பெறும் போது ஜல்லிக்கட்டு என்ற பாரம்பரியம் காப்பாற்றப்படுவதோடு இதன் மூலம் ஏற்படும் நன்மைகள் இன்றைய தலைமுறை மட்டுமில்லாமல், நமக்கு அடுத்து வரும் இளைய தலைமுறையினருக்கும் பலன் அளிக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது.