பிரபல நடிகர் ஜீவா கொடியசைத்து தொடங்கி வைத்த மாரத்தான் போட்டி


ஆர்.சி.சி. மேக்னம் அறக்கட்டளையானது காஞ்சிபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள இளைஞர்கள் மற்றும் பெண்களின் திறன் மேம்பாட்டுக்காக, பிரதான் மந்திரி யோஜனாவின் கீழ் *ஸ்கில் இந்தியா* என்னும் சிறந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது. காஞ்சிபுரத்தில் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா அமைப்புடன் இணைந்து, பெண்களுக்கான ஆரோக்கிய பயிற்சி மையம், தையல் பயிற்சி மையம் மற்றும் இளைஞர்களுக்கான மொபைல் பழுதுபார்க்கும் மையம் ஆகியவற்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

அமைப்பின் தலைவர் பிரசாந்த் ஆச்சா கூறுகையில், இளைஞர்களுக்கான சேவையில் எங்கள் முயற்சிகளுக்கு உதவுவதற்காக, மேக்னதான் 2019 என்னும் மாரத்தான் போட்டியை பெசன்ட் நகரில் உள்ள ஆல்காட் பள்ளியில் நடத்தியுள்ளோம். இந்த நிகழ்வுக்கு மெட்ராஸ் சூப்பர் ஸ்டோர் மற்றும் ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் லிமிடெட் உள்ளிட்ட பல்வேறு ஸ்பான்சர்கள் நன்கு ஆதரவளித்தனர் என்றார்.

மேலும், இந்த மாரத்தான் போட்டியில் நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 5000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாக மாக்னதான் இயக்குனர் திரு ஜெய் ரங்கா தெரிவித்தார். இந்த போட்டியில் 5 கி.மீ, 10 கி.மீ, 21 கி.மீ மற்றும் 6-12 வயதுடைய குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் ஓடும் 1.5 கி.மீ என 4 பிரிவுகள் இடம் பெற்றன. 1.5 கி.மீ பிரிவை பிரபல திரைப்பட நடிகர் ஜீவா கொடியசைத்து துவக்கி வைத்தார். பால்சன்ஸ் குழுமத்தின் தலைவர் டாக்டர் எஸ்.ஆர்.சாம் பால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

இந்த மராத்தானில் எத்திராஜ் கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற போட்டியினை சமூக செயற்பாட்டாளரும், எத்திராஜ் கல்லூரி சேர்மனுமான V.M. முரளிதரன், கொடியினை அசைத்து தொடங்கி வைத்தார். திட்ட இயக்குநர் திரு அபிஷேக் ஜெயின், ஏற்கனவே 250 க்கும் மேற்பட்ட தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளோம், அவர்கள் கூடுதல் வருமானத்தை ஈட்டத் தொடங்கியுள்ளனர், மேலும் சிறந்த வாழ்க்கையை நடத்தி வருகின்றனர் எனக் கூறினார். செயலாளர் ஆதிஷ் பர்மர், இந்த போட்டிக்காக வழிகாட்டுபவர்கள், நீர் அருந்துதல் மற்றும் அற்புதமான காலை உணவு உட்பட அனைத்து அம்சங்களிலும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.