மாடிட்டோரியம் எப்.டி.எப்.எஸ்.

சுதந்திரமான இசைக்கலைஞரும் ஓலி வடிவமைப்பாளரான பத்ரி நாராயணனின் எண்ணத்தில் உதித்த புதுமையான இசை முயற்சிதான் மொட்டை மாடி இசைக் கச்சேரி. அது என்ன மொட்டை மாடி இசைக் கச்சேரி என்கின்றீர்களா? அதாவது மொட்டை மாடியில் சுமார் இருபது முப்பது இசைக் கலைஞர்களும் பாடகர்களும் ஒன்றிணைந்து பாடுவதுதான் மொட்டை மாடி இசைக் கச்சேரி.
விளையாட்டுத்தனமாக சாதாரணமாகத் தொடங்கிய இந்த இசை ஆர்வலர்களின் புதிய முயற்சி, இன்று விஸ்வரூபமெடுத்து மாடிட்டோரியம் எப்.டி.எப்.எஸ். என்று வளர்ந்திருக்கிறது.

தரமாக நிர்வகிக்கப்படும் அரங்கம், உலகத் தரம் வாய்ந்த ஓலி ஓளியமைப்புகள், உணவரங்குகள் மற்றும் இதர பொழுதுபோக்கு அம்சங்கள் என்று அனைத்தையும் ஒரே வளாகத்திற்குள் அமைத்து, திரையரங்கில் படம் பார்ப்பதை எல்லா விதத்திலும் மாற்றியமைத்து மறக்க முடியாத அனுபவமாக மாற்றிய சென்னை சத்தியம் அரங்கும் இந்த மொட்டை மாடிக் கலைஞர்களுக்கு தளம் அமைத்துத் தந்தால் எப்படி இருக்கும்
ஆம் இந்த மொட்டை மாடிக் இசைக் கலைஞர்களின் நிகழ்ச்சி ஞாயிறு காலை சத்தியம் திரையரங்கில் நடந்தபோது அரங்கம் கொள்ளாத அளவுக்கு கூட்டம் நிரம்பி வழிந்தது. நட்சத்திர நடிகர்களின் முதல் நாள் முதல் காட்சிக்கு வரும் ரசிகர்களின் கொண்டாட்ட மனநிலைக்கு இசை ஆர்வலர்களை பரவசப்படுத்தியது மாடிட்டோரியம் எப்.டி.எப்.எஸ். 
இந்த இசை குழுவின் சிறப்பம்சமே பார்வையாளகளையும் நிகழ்ச்சியில் பங்கெடுக்கச் செய்து,  அவர்களையும் பாட வைப்பதுதான். சத்தியம் திரையரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கென பிரத்யேகமாக ஒரு ஆப் வடிவமைக்கப்பட்டு,  பார்வையாளர்கள் க்யூ ஆர்  கோட் மூலம் ஸ்கேன் செய்து நிகழ்ச்சியில் பாடல்களைப் பாடி இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றது, அவர்களுக்கு மட்டுமல்ல மற்ற பார்வையாளர்களுக்கும் வித்தியாசமான இசை அனுபவத்தைத் தந்தது.

புதுமையான இசை நிகழ்ச்சியை சத்தியம் திரையரங்கில்  நடத்தியது குறித்து எஸ்.பி.ஐ.சினிமாஸின் இயக்குநர் திரு ஸ்வரூப் ரெட்டி பேசுகையில், “நாடெங்கும் பல்வேறு பகுதிகளில் தொடர் திரையரங்குகளை நடத்தி வரும் எங்கள் நிறுவனம், ரசிகர்களின் அனைத்து வகையான ரசனைக்கும் ஆரோக்கியமான வடிகாலாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். கடந்த ஆண்டு இசை விழாவின்போது நாங்கள் பங்கு பெற்ற கர்நாடக இசைக் கச்சேரி ஒன்றுக்கு இசை ஆர்வலர்களிடம் பெரிய வரவேற்பு இருந்தது. எனவேதான் இசையை பெரிதும் விரும்புகிறவர்களின் ரசனையையும் திருப்திபடுத்த விரும்புகிறோம். ரசிகர்களுக்கு நல்ல திரைப்படம் பார்த்த அனுபவத்தை தொடர்ந்து வழங்கி வரும் நாங்கள், இசையில் ஆர்வமுள்ளவர்களுக்கும் விருந்தளிக்க முன் வந்திருக்கிறோம். இது தொடரும்” என்றார்