‘மனுசனா நீ’ என்ற தமிழ் திரைப்படத்தை கஸாலி என்பவர் தயாரித்து, இயக்கி கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி வெளியிட்டார். அந்தப் படம் ‘கிருஷ்ணகிரி முருகன்’ தியேட்டரிலிருந்து திருட்டுத்தனமாக எடுக்கப்பட்டு இண்டர்நெட்டில் ஏற்றப்பட்டது.
இது விசயமாக கஸாலி ‘ஃபாரன்சிக் வாட்டர்மார்க்’ முறையில் கண்டுபிடித்து மேற்படி கிருஷ்ணகிரி முருகன் தியேட்டர் உரிமையாளர் முருகன் மற்றும் ஆப்பரேட்டர் ஆகியோரை பிப்ரவரி 27 ஆம் தேதி போலீசார் கைது செய்து கியூப் நிறுவனத்தின் புரஜக்டர் மற்றும் சர்வர் ஆகியவற்றை பறிமுதல் செய்ய வைத்தது அனைவரும் அறிந்ததே.
இதன் காரணமாக முருகன் தியேட்டர் உரிமையாளரின் மகன் பாலாஜி என்பவர், எப்படியும் தயாரிப்பாளர் கஸாலியை இந்தக் கேஸிலிருந்து வாபஸ் வாங்க வைக்க வேண்டும் என்று முயற்சி செய்தார். கஸாலி உறுதியாக இருக்கவே, தற்போது அந்தத் தியேட்டரில் வேலை செய்யும் துரைராஜ் என்பவரை, கஸாலி மார்ச் 20 ஆம் தேதி அடியாட்களுடன் கிருஷ்ணகிரிக்குச் சென்று அடித்து உதைத்து சாதியைச் சொல்லித் திட்டியதாகவும், புரஜக்டர் மற்றும் சர்வர் இவற்றைத் தூக்கிக்கொண்டு வந்ததாகவும் பொய்யான புகார் கடிதம் ஒன்றை (கடிதம் இணைக்கப்பட்டுள்ளது) கஸாலிக்கு அனுப்பினார். அதில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர்.
மேலும், கஸாலி அவர்களை முகம் தெரியாத ஆட்கள் வீட்டுக்கு வந்து மிரட்டிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். எனவே, கஸாலி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார்( கடிதம் இணைக்கப்பட்டுள்ளது) கொடுத்திருக்கிறார்.
ஒரு தயாரிப்பாளரின் படம் ரிலீசான அன்றே திருடப்பட்டால் அந்தத் தயாரிப்பாளருக்கு எவ்வளவு இழப்பு ஏற்படும் என்று தெரிந்திருந்தும், பொறுப்பில்லாத சில தியேட்டர்களின் செயலால் தமிழ்த் திரையுலகமே நஷ்டத்தில் தத்தளிக்கிறது. கண்டுபிடித்து நஷ்டஈடு கேட்டால், கொலை மிரட்டல் அளவுக்குச் செல்லும் கிருஷ்ணகிரி முருகன் தியேட்டர் போன்றவர்கள் சரியானபடி தண்டிக்கப்பட்டால்தான் தமிழ் சினிமாவின் எதிர்காலம் சரியாக அமையும் என்பது தயாரிப்பாளர்/ இயக்குனர் கஸாலியின் குமுறல்..