தனித்துவமான, சவாலான கதாபாத்திரத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா
தமிழ் சினிமாவின் தன்னிகரில்லா லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் மூன்றாவது தயாரிப்பில் மிகவும் தனித்துவமான, சவாலான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். பொதுவாக நடிகைகள் தங்களுடைய நட்சத்திர அந்தஸ்தை ஒரு சில ஆண்டுகள் தக்க வைத்துக் கொள்ளவே போராடும் இந்த காலத்தில், 15 ஆண்டுகளுக்கும் மேலாக உச்ச நடிகையாக இருந்து வருகிறார் நயன்தாரா. மக்கள் மனதையும், விமர்சகர்களையும் ஒரு சேர வென்று இருக்கிறார். 2017இல் அவர் நடித்த அறம் பல்வேறு பாராட்டுக்களையும், விருதுகளையும் பெற்றுத் தந்திருக்கிறது.
#Nayan63 அறிவிக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் சமூக வலைத்தளங்கள் முழுக்க இதை பற்றிய ட்வீட், ஷேர், கமெண்ட்ஸ் என பரவி இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் சாதனை படைத்தது. இதுவே மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அவருடைய இடத்தை உணர்த்தியது.
தயாரிப்பாளர் கோட்டபாடி ஜெ ராஜேஷ், நயன்தாரா இணைந்து கொடுத்த அறம், எல்லா பட்டியலிலும் 2017ன் சிறந்த படம் என்ற பெயரை பெற்றது. இரண்டாவது முறையாக அவர்கள் இணையும் இந்த படத்திலும், அதிர்ஷ்டம் தொடரும் என்று எதிர்பார்க்கலாம்.
இன்னும் பெயரிடப்படாத நயன்63 ஒரு ஹாரர் படம். மணிரத்னம், ஏஆர் முருகதாஸ் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றிய கேஎம் சர்ஜூன் இயக்குகிறார். இதற்கு முன்னதாக மா என்ற குறும்படத்தையும், வெளி வர தயாராக இருக்கும் எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் படத்தையும் இயக்கியிருக்கிறார்.
சென்னையில் இன்று காலை படப்பிடிப்பு துவங்கியது. ஆர்வத்துடனும், சுறுசுறுப்புடனும் இருக்கும் தயாரிப்பாளர் ராஜேஷ் பேசும்போது, “லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் மீண்டும் ஒரு படத்தில் இணைவது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். மகிழ்ச்சிக்கு காரணம், படப்பிடிப்பு துவங்கியது மட்டுமில்லை, இந்த இளம் படக்குழுவின் ஆற்றல், ஒவ்வொரு காட்சிக்கும் அவர்கள் போடும் உழைப்பையும் கண்கூடாக பார்த்ததால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அவர்கள் கூறுவதுபோல, பெரிய சக்தி வரும்போது, பெரிய பொறுப்பும் வருகிறது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்களுடன் இரண்டாவது முறையாக இணைவது சுவாரஸ்யமாகவும், அதே சமயம் எங்களை மேம்படுத்திக் கொண்டு ஒரு சென்சேஷனல் படம் கொடுக்கும் சவலான விஷயமாகவும் அமைந்திருக்கிறது” என்றார்.