அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டை பொறுத் தவரை காங்கிரஸ் ஜல்லிக் கட்டுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே கொண்டுள்ளது. ஒருபோதும் ஜல்லிக்கட்டு தடைக்கு ஆதரவாக செயல்பட்டதில்லை. மிகப்பெரிய ஜனநாயக கட்சியில் மாறுபட்ட கருத்துக்கள் இருப்பது சகஜம். பா.ஜனதாவில் கூட மேனகாகாந்தி ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும் என்கிறார். பொன்.ராதாகிருஷ்ணன் ஜல்லிக்கட்டு தடைகூடாது என்கிறார். ஜெய்ராம் ரமேஷ் காளைகளை காட்சிப்படுத்தப்படாத பட்டியலில் சேர்த்தாலும் 2015 வரை ஜல்லிக்கட்டு நடக்கத்தானே செய்தது. ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக சென்னையில் மாணவர்களும், இளைஞர்களும் மிக அமைதியான முறையில் போராட்டம் நடத்தினார்கள். 6 நாட்கள் எந்த விதமான அசம்பாவிதங்களும் இல்லாமல் நடைபெற்ற போராட்டத்தில் திடீரென்று 7-வது நாள் காலையில் வன்முறை எப்படி உருவானது? மாணவர்கள் வன்முறையில் ஈடுபட நினைத்து இருந்தால் ஒரு வாரம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லையே. போராட்டம் தொடங்கிய ஓரிரு நாட்களிலேயே வன்முறையில் ஈடுபட்டிருக்கலாமே. வன்முறையை தூண்டியது, போலீஸ் நிலையத்துக்கு தீ வைத்தது போன்ற செயல்களில் மாணவர்கள் ஈடுபடவில்லை. போலீசார் தான் இந்த வன்முறைக்கு காரணம். தமிழக அரசியலை பொறுத்தவரை ஜெயலலிதா சாதாரணமான தலைவர் அல்ல. மிகப்பெரிய தலைவர் மக்களால் மதிக்கப்படுபவர், நேசிக்கப்படுபவர். சசிகலாவை பற்றி நான் எதுவும் கூற விரும்பவில்லை. அதை முக்கியத்துவமாக நினைக்கவில்லை. ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சர். தன்னை சுற்றி இருக்கும் கூட்டைவிட்டு வெளியே வர வேண்டும். அவர் மீது நிறைய எதிர்பார்க்கிறோம். தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. காமராஜருக்கு பிறகு காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கவில்லை. ஆனாலும் 3-வது பெரிய கட்சியாக இருக்கிறோம். மக்கள் மனங்களில் இடம்பிடித்து வரும் காலத்தில் உள்ளாட்சி தேர்தலிலும், 2019 சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெறுவதற்காக எங்களை நாங்கள் தயார்படுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.