‘மெட்ரோ’ நிறுவனத்திடம் கோயம்பேடு பஸ் நிலையத்தை ஒப்படைக்க ஆலாேசனை

 

எம்.ஜி.ஆர் முதல்-அமைச்சராக இருந்த போது ஐகோர்ட்டு பஸ் நிலையத்தை கோயம்பேடுக்கு மாற்ற முடிவு செய்தார். முதல்கட்டமாக கொத்தவால்சாவடியில் செயல்பட்டு வந்த மொத்த காய்கறி மார்க்கெட் கோயம்பேடுக்கு மாற்றப்பட்டது.

அதன் பிறகு தி.மு.க ஆட்சியில் ரூ. 103 கோடி செலவில் கோயம்பேட்டில் புறநகர் பஸ் நிலையம் அமைக்கும் பணி தொடங்கியது. பஸ் நிலையம் அமைக்கும் பணியை சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ) மேற்கொண்டு வந்தது. 2002   ஆண்டு கட்டுமானப்பணிகள் முடிந்து அப்போது முதல்- அமைச்சராக இருந்த ஜெயலலிதா கோயம்பேடு பஸ் நிலையத்தை திறந்து வைத்தார்.

இது ஆசியாவின் 2-வது மிகப்பெரிய பஸ்நிலையமாக திகழ்கிறது. இங்கிருந்து ஒரே நேரத்தில் 180 பஸ்கள் புறப்படும் வகையில் பஸ் நிற்கும் இடங்களும், 60 பஸ்கள் பஸ்நிலையத்தின் உள்ளே நிறுத்தவும் 270 பஸ்கள் காத்திருக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டது. உள்ளே 6 பிளாட்பாரங்கள், பிரமாண்டமான காத்திருப்பு மண்டபம் அமைந்துள்ளது. நாள் ஒன்றுக்கு 3,000 பஸ்கள் வந்து செல்கின்றன. இதன் மூலம் தினமும் 2½ லட்சம் பயணிகள் பயணம் செய்கிறார்கள்.

பயணிகளின் இருசக்கர வாகனம், கார்கள் நிறுத்த விசாலமான இட வசதியும், ஆட்டோ, டாக்ஸி நிறுத்தங்களும் அமைந்துள்ளது. அத்துடன் சென்னை நகரின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று வரக்கூடிய வகையில் பிரமாண்டமான மாநகர பஸ் நிலையமும் கோயம்பேடு புறநகர் பஸ்நிலையத்துடன் இணைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மெட்ரோ ரெயில் நிலையமும் கோயம்பேடு பஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து மெட்ரோ ரெயில் மூலம் ஆலந்தூர் மார்க்கமாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டியும் இருக்கிறது. தற்போது கோயம்பேடு பஸ் நிலையம் அதனையொட்டியுள்ள கோயம்பேடு மொத்த வணிக அங்காடி ஆகியவை சி.எம்.டி.ஏ நிர்வாகத்தின் கீழ் உள்ளது.

இங்கு பராமரிப்பு பணிகளையும் சி.எம்.டி.ஏ. மேற்கொண்டு வருகிறது. விமானநிலையம் வரை சென்று வரலாம். இது போல் கோயம்பேட்டில் இருந்து திருமங்கலம், அண்ணாநகர் வழியாக சென்ட்ரல் வரை சுரங்க மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட்டு இதில் நேரு பூங்காவரை மெட்ரோ ரெயில் ஓடுகிறது. இதனால் சென்ட்ரல் போல் கோயம்பேடும் மிக முக்கியமான போக்குவரத்து இணைப்பு மையமாக உருவாகி உள்ளது. இதனால் கோயம்பேட்டில் பயணிகளுக்கு மேலும் பல வசதிகள் செய்து தர வேண்டி உள்ளது. அத்துடன் சி.எம்.டி.ஏ. என்பது திட்டமிடல், நிர்வாகம் போன்ற பணிகளை மட்டுமே உருவாக்க கூடியது.

அதனால் பராமரிப்பு பணியை மேற்கொள்வதில் சிரமம் உள்ளது. மேலும் கோயம்பேடு பஸ் நிலையத்தையும், வணிக வளாகத்தையும் பராமரிப்பது என்பது மிகப்பெரிய சவாலான பணியாகும். தற்போது மெட்ரோ ரெயில் நிறுவனம் சென்னையில் மெட்ரோ ரெயில் நிலையங்களை சிறப்பாக பராமரித்து வருகிறது. எனவே கோயம்பேடு பஸ் நிலையத்தையும் மெட்ரோ ரெயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கலாமா என ஆலோசனை நடந்து வருகிறது.

கடந்த சில வருடங்களாகவே கோயம்பேடு பஸ் நிலையத்தை மெட்ரோ ரெயில் நிறுவனத்திடம் ஒப்படைப்பது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தற்போது மெட்ரோ ரெயில் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி இருப்பதால் மீண்டும் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.