கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் 4வது தெருவை சேர்ந்த மாடசாமி என்பவரது மகன் கனகராஜ். முன்னாள் 36வது வார்டு கவுன்சிலரான இவர் அப்பகுதியில் கேபிள் டிவி நடத்தி வருகிறார். அதன் மூலம் வரும் வருவாய் பணம் அவருக்கு 10 ரூபாய் நாணயங்களாக கேபிள் டிவி வீட்டு இணைப்புதாரர்கள் கொடுத்துள்ளனர். இந்நிலையில், கனகராஜ் எல்.ஐ.சி. பிரிமியம் கட்ட கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தில் உள்ள கிளை அலுவலகத்தில் 1075ரூபாய் பிரிமியத்திற்கு 10 ரூபாய் நாணயங்களை வழங்கியுள்ளார். அதை ஏற்க காசாளர் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த கனகராஜ் எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு, ரிசர்வ் வங்கி வெளியிட்ட 10 ரூபாய் நாணயங்களை அரசு நிறுவனம் வாங்க மறுப்பதை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்டார். மேலும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தலின்படி, 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பவர்கள் மீது போலீசில் புகார் தெரிவிக்கப் போவதாகவும் தெரிவித்தார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது