கோடிட்ட இடங்களை நிரப்புக – சினிமா விமர்சனம்

சென்னையில் டிராவல்ஸ் கம்பெனியில் கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார் பார்த்திபன். இவருக்கு ஒருநாள் வெளிநாட்டில் இருந்து வரும் சாந்தனுவின் அறிமுகம் கிடைக்கிறது. சாந்தனுவை பற்றி நன்கு தெரிந்திருக்கும் பார்த்திபன், அவரை தனது கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு பங்களாவில் தங்க வைக்கிறார். சாந்தனுவும் பார்த்திபனின் பேச்சில் மயங்கி, அவர் சொல்லும் இடத்திலேயே தங்க முடிவு செய்கிறார். அந்த பங்களாவில் பணிபுரியும் பார்வதி நாயரை பார்த்தவுடனே சாந்தனுவுக்குள் ஒருவித ஈர்ப்பு வந்துவிடுகிறது. அவளும் சாந்தனுவிடம் நெருங்கி பழக ஆரம்பிக்கிறாள். ஒருகட்டத்தில் பார்த்திபனின் மனைவிதான் பார்வதி நாயர் என்பது சாந்தனுவுக்கு தெரிய வருகிறது. பார்த்திபனின் வயதுக்கும், பார்வதி நாயரின் வயதுக்கும் ஒத்துப்போகாத நிலையில், இந்த திருமணம் எப்படி நடந்தது? என்று சாந்தனு கேட்கையில், அதற்கு பார்த்திபன், தான் சிறுவயதிலிருந்தே பார்வதி நாயரை தூக்கி வளர்த்ததாகவும், அவளுக்கு நடக்க இருந்த திருமணம் நின்றுபோன நிலையில், வேறு வழியின்றி சிறுவயதிலிருந்து தனக்கு ஆதரவளித்த பார்வதி நாயருடைய அம்மாவுக்கு நன்றிகடன் செலுத்தும்வகையில் அவளை திருமணம் செய்துகொண்டதாகவும் கூறுகிறார். மேலும், திருமணத்திற்கு பிறகு நடந்த ஒரு விபத்தில் தனக்கு காலில் அடிபட்டதையும், இதையடுத்து, தாம்பத்ய ரீதியாக தனது மனைவியை திருப்திபடுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்ட வேதனையையும் சொல்லி முடிக்கிறார். இதையெல்லாம் பொறுமையாக கேட்ட சாந்தனு, அவர் மீது இரக்கப்படுவதா? அல்லது வேதனைப்படுவதா? என்ற நிலைமையில் இருக்கிறார். இந்நிலையில், அடிக்கடி பார்வதி நாயருக்கு வலிப்பு வருவதும், அதற்காக அவர் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருவதையும் சாந்தனு அறிகிறார். ஒருமுறை வலிப்பு வரும்போது அவரை ஆஸ்பத்திரியில் சேர்க்கிறார், சாந்தனு. அந்த நேரத்தில் சாந்தனுவிடம், மருத்துவர் அவள் தாம்பத்யத்தில் முழு திருப்தி கிடைக்காததால்தான் வலிப்பு வருவதாக கூறுகிறார். இதையெல்லாம் கேட்ட சாந்தனு இதற்கு என்ன முடிவெடுத்தார்? சாந்தனுவை பார்த்திபன் தன்னுடனே தங்க வைக்க காரணம் என்ன? என்பதற்கெல்லாம் பிற்பாதியில் பதில் சொல்லியிருக்கிறார்கள்.  பார்த்திபன் இப்படத்தை இயக்கியதோடு மட்டுமில்லாமல் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். வெறுமனே நடிக்கவேண்டும் என்பதைவிட இப்படத்தில் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். பார்த்திபனின் வழக்கமான நக்கல், நையாண்டி வசனங்களும் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்து படைக்கிறது.  இப்படத்தின் நாயகன் சாந்தனு என்பதைவிட, அவரைவிட அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நாயகி பார்வதி நாயர். கடைசிவரை இவருடைய கதாபாத்திரம் மர்மமாகவே செல்வது சிறப்பு. அவருடைய தோற்றத்தை விட, நடிப்பு பிரமாதமாக இருக்கிறது.  சாந்தனு, இப்படத்தில் கதைக்கு என்ன தேவையோ அதை சிறப்பாக செய்திருக்கிறார். நடனத்திலும் தனது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார். சிறப்புத் தோற்றத்தில் வந்துபோனாலும் சிம்ரன் ரசிக்க வைத்திருக்கிறார். தம்பிராமையாவின் காமெடி வழக்கம்போல்தான் என்றாலும், ஒருசில இடங்களில் அதிகமான முகபாவனைகளை கொடுத்து ரசிக்க விடாமல் செய்துவிடுகிறார். இந்தப் படம் முற்றிலும் புதுமையமான கதைக்களம் என்று சொல்லிவிட முடியாது. ஆனால், வித்தியாசமான கதாபாத்திரங்களை கொண்டு, வேறு கோணத்தில் யோசித்து எடுக்கப்பட்ட கதையென்று சொல்லிவிட முடியும். ஏனென்றால், இந்தப் படத்தில் கதையைவிட, வசனங்கள், திரைக்கதை, ஒவ்வொரு கதாபாத்திரங்களின் தன்மை என அனைத்தும் அருமையாக அமைந்துள்ளது. அவ்வப்போது கொஞ்சம் கிளாமரான காட்சிகளும் வந்துபோகிறது. குறிப்பிட்ட சில கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு எதையும் அளவுக்கு மீறி கொண்டு செல்லாமல் அழகாக சொல்லியிருக்கிறார், பார்த்திபன். கதாபாத்திரங்களின் போக்கு வேறுவிதமாக இருந்தாலும்,  அது சரியென்று சொல்லும்படி முடிவை வைத்திருந்தாலும், குடும்பத்தோடு சென்று பார்க்க முடியாத ஒரு படத்தை பார்த்திபன் கொடுத்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். சத்யாவின் இசையமைப்பில் பாடல்கள் சுமார் ரகம்தான். ‘டமுக்காட்டலாம் டமுக்காட்டலாம்’ பாடல் கேட்பதற்கு மட்டும் குதூகலம் கொடுத்திருக்கிறது. அதை தனது நடனத்தினால் மேலும் மெருகேற்றியிருக்கிறார் சாந்தனு. அர்ஜுன் ஜனாவின் ஒளிப்பதிவு படத்திற்கு கொஞ்சம் பலம் கொடுத்திருக்கிறது.